அவுஸ்திரேலியாவிடம் இந்திய அணி மிக மோசமான தோல்வி

posted Dec 29, 2011, 10:14 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 29, 2011, 10:15 AM ]
முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம்  இந்திய அணி மிக மோசமான தோல்வியடைந்துள்ளது. வெற்றி பெற 292 ரன்கள் தேவை என்று நிலையில் களமிறங்கிய இந்திய அணி தேநீர் இடைவேளை முடிந்த ஒரு மணிநேரத்தில் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
வழக்கம் போல் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடையும் மரபை டோனியின் தலைமையிலான இந்திய அணியும் கடைபிடித்துள்ளது.

அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தொடக்கம் முதலே இந்திய துடுப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

300 ரன்களுக்கும் குறைவான இலக்கைத் துரத்தலாம் என்று சூளுரைத்த சேவாக் பல இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சியை ஆன் செய்வதற்கு முன்பே ஆட்டமிழந்தார்.

ஹில்ஃபென் ஹாஸ் வீசிய தண்டமான பந்தை பளார் என்று அறைய சரியாக உயரம் எழும்பாத ஷாட்டினால் ஹஸ்ஸியிடம் சென்று பிடி எடுக்கப்பட்டது. 

கம்பீர் போன்றவர்கள் இது போன்ற தொடர்களில் விளையாடாமல் இருப்பதே நல்லது. அவரை பாடாய் படுத்தி எடுத்தனர் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கடைசியில் 13 ரன்களில் சிடில் பந்தை எட்ஜ் செய்தார்.

டிராவிட் மீண்டும் ரன் எடுக்கும் வழிகளுக்குள் திரும்பாமல் பந்துகளை ஆடாமல் விடுவதை உத்தியாகக் கொண்டதால் பவுண்டரி பந்துகளும் தடுத்தாடப்பட்டன. இதனால் 10 ரன்கள் எடுத்து கால்களை நகர்த்தாமல் மட்டையை நீட்ட பந்து பேட்டிற்கும் பேடிற்கும் இடையேயான ஒரு ஆள் புகும் கேப்பில் புகுந்து ஸ்டம்ப்களை வீழ்த்தியது.

லஷ்மணை கட்டிப்போடும் உத்திகளை இப்போதெல்லாம் பந்து வீச்சாளர்கள் கண்டுபிடித்துக் கொண்டன. அவர் 14 பந்துகளில் 1 ரன் எடுத்து கடைசியில் அவர் நன்றாக விளையாடும் பிளிக் ஷாட்டில் ஆட்டமிழந்தார்.

மற்றுமொரு தேராத வீரர் வீரத் கோலி இவர் ரன் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

சச்சின் டெண்டுல்கர் 46 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து 4 பவுண்டரிகளையும் அடித்து அபாரமாக ஆடி வந்தார். ஆனால் எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிய அவரது கவனம் சிதற சிடில் வீசிய வெளியே சென்ற பந்தை டிரைவ் செய்ய முயன்று கல்லியில் கேட்ச் கொடுத்தார். கிட்டத்தட்ட பாண்டிங் அவுட் ஆனது போலவே இருந்தது.

அஷ்வினும் தோனியும் 36 ரன்கள் சேர்த்தனர். அஷ்வின் 35 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து சிடில் வீசிய பவுன்சரில் ஆட்டமிழந்தார்.

ஜாகீர் கான், பேட்டின்சன் பந்தில் ஒரு பவுண்டரி ஒரு மிகப்பெரிய சிக்சர் அடித்து 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தவுடன் தோனி வெறுப்பில் பேட்டின்சனை சுற்றி பவுல்டு ஆனார். தோனி 23 ரன்கள் எடுத்தார்.

கடைசியில் உமேஷ் யாதவ் வாண வேடிக்கைக் காண்பிக்க 21 ரன்கள் எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார்.

இந்தியா 48வது ஓவரில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்து 122 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

அவுஸ்திரேலிய அணியில் பேட்டின்சன் 4 விக்கெட்டுகளையும் சிடில் 3 விக்கெட்டுகளையும் ஹில்ஃபென் ஹாஸ் 2 விக்கெட்டுகளையும் லயன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக பேட்டின்சன் தேர்வு செய்யப்பட்டார்.