சாம்பியன்ஸ் லீக்: மலிங்கா, பிராங்ளினுக்கு ஹர்பஜன்சிங் பாராட்டு

posted Oct 9, 2011, 8:21 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 9, 2011, 10:36 AM ]
சாம்பியன்ஸ் லீக்கின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நுழைந்ததற்கு மலிங்கா, பிராங்ளினின் சிறப்பான ஆட்டமே காரணம் என்று அந்த அணியின் கேப்டன் ஹர்பஜன்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். 


சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சென்னையில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 10 ரன்னில் சோமர்செட் அணியை வென்றது.

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. பிளிசர்ட் 39 பந்தில் 54 ரன் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். 

பின்னர் ஆடிய சோமர் செட் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது.கிவ்ஸ்வெட்டர் 46 பந்தில் 62 ரன் எடுத்தார். மலிங்கா 4 விக்கெட்டும், பிராங்ளின் 2 விக்கெட்டும் எடுத்தனர். 

இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்பஜன்சிங் கூறியதாவது: 

19-வது ஓவரில் பிராங்ளின் 2 விக்கெட் கைப்பற்றினார்.இதுவே திருப்புமுனை ஆட்டத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.கடைசி இரண்டு ஓவர் அனைத்தையும் மாற்றி விட்டது. மலிங்கா, பிராங்ளின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

பிராங்ளின் நேர்த்தியுடன் வீசுவார் என்று கருதி 19-வது ஓவரில் அவரை வீச அழைத்தேன்.அதற்கு நல்ல பலன் கிடைத்தது என்றார் ஹர்பஜன் சிங்.