ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம்,

posted Dec 12, 2011, 9:13 AM by Sathiyaraj Kathiramalai
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம், அடுத்த மாதம் கடைசியில் அல்லது பிப்ரவரி மாதம் துவக்கத்தில் நடக்கலாம்.
ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கவுள்ளது. இத்தொடரை நடத்துவது குறித்து ஐ.பி.எல்., நிர்வாகக்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் கூடியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
சமீபத்தில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத்தினால் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி ஐ.பி.எல்., தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உள்ளிட்ட ஒன்பது அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. இதனால் இம்முறை, முதல் மூன்று தொடரில் விளையாடியது போல, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். இதில் உள்ளூரில் ஒரு போட்டியிலும், வெளியூரில் (எதிரணி) ஒரு போட்டியிலும் விளையாடும். இதன்மூலம் இம்முறை, 72 லீக் போட்டிகள், 2 அரையிறுதி, ஒரு மூன்றாவது இடத்துக்கான போட்டி மற்றும் ஒரு பைனல் உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கவுள்ளன. துவக்க விழா மற்றும் பைனல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. அரையிறுதிப் போட்டிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளது.
தற்போது ஒவ்வொரு அணியிலும் 30 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனை 33 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விளையாடும் லெவன் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இதில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்களின் ஏலம், அடுத்த மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் துவக்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐ.பி.எல்., நிர்வாகக்குழு தலைவர் ராஜீவ் சுக்லா தெரித்துள்ளார். இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா ரூ. 10.38 கோடி செலவழிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.