இரண்டாவது டெஸ்டில், அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற விகிதத்தில் டிராவில் முடிந்தது. தென் ஆப்ரிக்கா சென்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. கப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட், ஜோகனஸ்பர்க் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 266, ஆஸ்திரேலியா 296 ஓட்டங்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 339 ஓட்டங்கள் எடுத்தது. பின், 310 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு, இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்றைய ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாக துவங்கியது. அவுஸ்திரேலிய அணிக்கு கப்டன் மைக்கேல் கிளார்க் (2) ஓட்டங்களில் ஏமாற்றினார். பாண்டிங் (62) ஓட்டங்கள் தந்து நம்பிக்கை தந்தார். பின் இணைந்த மைக்கேல் ஹசி, பிராட் ஹாடின் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. ஹசி 39 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த ஜான்சனுடன் இணைந்த ஹாடின், டெஸ்ட் அரங்கில் தனது 9வது அரைசதம் அடித்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 72 ஓட்டங்கள் சேர்த்த போது ஹாடின் (55) அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பீட்டர் சிடில் (4) சோபிக்க தவறவிட்டதும் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் பொறுப்பாக ஆடிய ஜான்சன், கம்மின்ஸ் ஜோடி அணிக்கு அதிரடி வெற்றியை தேடி தந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 310 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜான்சன் (40), கம்மின்ஸ் (13) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பிலாண்டர் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார். தென் ஆப்ரிக்க அணி நிர்ணயித்த 310 ஓட்டங்களை எளிதாக எட்டிய ஆஸ்திரேலிய அணி, ஜோகனஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ் மைதானத்தில், சிறந்த சேஸிங்கை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2006ல், இங்கு நடந்த டெஸ்டில், அவுஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 294 ஓட்டங்களை சேஸ் செய்தது. |
விளையாட்டு >