அவ்ரிடியின் சகலதுறை பாகிஸ்தான் தொடரை வெல்ல உதவியது

posted Nov 21, 2011, 6:39 PM by Sathiyaraj Kathiramalai
இலங்கை அணியுடனான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. சார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் 200 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  45.2 ஓவர்களில் 174 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் பாகிஸ்தான் அணி தனதாக்கியயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது பாகிஸ்தான் அணி 3-1 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

நான்காவது போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 7 ஆவது விக்கெட்டை இழந்தது. எனினும் 7 ஆவது வரிசை வீரர் சஹீட் அவ்ரிடி 65  பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பெண்டரிகள் உட்பட 75 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கைப் பந்துவீச்சாளர்களில் தில்ஹார பெர்னாண்டோ 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
201 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில்  குமார் சங்கக்கார 58 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 55 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் இலங்கை அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை 19 ஓட்டங்கள் இடைவெளியில் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சிலும் பிரகாசித்த அவ்ரிடி 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் சிறப்பாட்டக்காராக சஹீட் அவ்ரிடி தெரிவானார். 5 ஆவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை அபுதாபியில் நடைபெறவுள்ளது.
Comments