சச்சின் தனது புதிய வீட்டிற்கு முறைப்படி குடியிருப்பு அனுமதி சான்றிதழ் பெறவில்லை. இதற்காக மும்பை மாநகராட்சிக்கு ரூ. 4.35 லட்சம் அபராதம் செலுத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் சச்சின். இவர் மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோட்டில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டினார். இங்கு சமீபத்தில் குடியேறினார். ஆனால் வீட்டில் நிரந்தரமாக குடியிருப்பதற்கான தகுதி சான்றிதழை பெறவில்லை. இதையடுத்து மாநகராட்சி விதிமுறைகளை சச்சின் மீறியதாக புகார் எழுந்தது. அபராதம் செலுத்தும்படி நோட்டீசும் அனுப்பப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்""குடியிருப்பதற்கு தகுதியான இடம் என்று அனுமதி பெற்ற பிறகு தான் குடியேற வேண்டும். ஆனால் சச்சின் அனுமதி சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே "வாஸ்து பூஜை' செய்து விட்டு வீட்டில் குடியேறினார். இது சட்டத்துக்கு புறம்பான செயல். இதற்காக ஒரு சதுர அடிக்கு ரூ. 50 வீதம் இவரது வீடு அமைந்துள்ள சுமார் 836 சதுர அடியை கணக்கிட்டு ரூ. 4.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு அபராத தொகையை சச்சின் செலுத்தினார். இதையடுத்து இவருக்கு அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டது''என்றார். |
விளையாட்டு >