ஓய்வு வேண்டாம் ரியான் ஹாரிஸ்

posted Feb 16, 2012, 9:25 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 16, 2012, 9:25 AM ]
முத்தரப்பு தொடரில் தொடர்ந்து விளையாட தகுதியுடன் உள்ளேன். எனக்கு ஓய்வு வேண்டாம்,'' என, வேண்டுகோள் விடுத்துள்ளார் ரியான் ஹாரிஸ்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு தொடரில் இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் அடுத்து வரும் இலங்கை, இந்தியா அணிக்கு எதிரான போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிசிற்கு ஓய்வு தரப்பட்டது. இதுகுறித்து கடந்த 3 போட்டிகளில் 128 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட் மட்டும் கைப்பற்றிய ஹாரிஸ் கூறியது:

முன்னர் ஏற்பட்ட காயங்களின் போது போதுமான ஓய்வு எடுத்துள்ளேன். இப்போது எனக்கு எவ்வித காயமும் இல்லை. இதை நிரூபிக்கவும் தயாராக உள்ளேன். நான் நன்றாகவே உள்ளேன். இந்நிலையில் அடுத்த இரு போட்டியில் இருந்து எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்படி செய்துள்ளனர் என்ற தேர்வாளர்கள் நோக்கம் புரிகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஓய்வு தேவையில்லை. பவுலிங் செய்யவில்லை என்றால், சோர்வடைந்து விடுவேன்.

நன்றாக பவுலிங் செய்யவில்லை என்றால் உடனடியாக ஓய்வு தரக்கூடாது. இது எனது மனநிலையை எதிர்மறையாக மாற்றிவிடும். தொடர்ந்து விளையாடவே விரும்புகிறேன். எனது வேண்டுகோளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த வாரம் அல்லது அடுத்து என விரைவில் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.