அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாதது தான் தோல்விக்கான காரணம்

posted Jan 10, 2012, 9:01 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 10, 2012, 9:03 AM ]
இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாததுதான் பெரிய குறை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்விடைந்துள்ளது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு என எந்த நிலையும் இந்திய வீரர்களால் சாதிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவரை சேர்த்தது சரியில்லை, இவரை நீக்கியது தவறு, கேப்டன் தோனிதான் சரியில்லை, மூத்த வீரர்களால் பலனில்லை என்று பலதரப்பட்ட கருத்துகள் எழுந்துள்ளன.

அதில் வாசிம் அக்ரம் கூறியிருப்பது:

அவுஸ்திரேலிய மைதானங்களைப் பற்றி நன்கு அறிந்தவர் ஹர்பஜன் சிங். அவரை அணியில் சேர்க்காததால்தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஹர்பஜன் போன்ற வீரர்கள் நிச்சயமாக எதிரணி துடுப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கடி அளிப்பார்கள். அவுஸ்திரேலிய மைதானங்களில் சுழற்பந்து வீச்சு எடுபடாது. அதே நேரத்தில் பந்து சிறிதளவு எகிறும் வகையில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசினால் துடுப்பாட்ட வீரர்களை  திணற அடிக்க முடியும். இதில் ஹர்பஜன் சிங் வல்லவர். ஆனால் இளம் வீரரான அஸ்வினுக்கு இதுபோன்ற அனுபவம் இல்லை. இந்திய துணைக் கண்டத்தில்தான் அஸ்வினின் பந்து வீச்சு எடுபடும். அவர் அன்னிய மண்ணில் விளையாட நிறைய அனுபவமும் பெற வேண்டியுள்ளது என்று அக்ரம் தெரிவித்துள்ளார்.