![]() ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இன்று மிர்புரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன 12 ஓட்டங்களும், திலகரத்தன டில்சன் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சங்கக்கரா 71 ஓட்டங்களும், உபுல் தரங்கா 57 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ஹபிஸ் 11 ஓட்டங்களும், நசிர் ஜாம்ஷெட் 18 ஓட்டங்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய யூனிஸ் கானும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய உமர் அக்மல் அதிரடியாக விளையாடி 77 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் உபுல் தரங்கா பிடியில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரம் இலங்கை அணி இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
விளையாட்டு >