![]() ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் நான்காவது போட்டி இன்று மிர்புரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கவுதம் கம்பீர் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான முன்னணி நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பலநாட்களாக தவற விட்ட தனது நூறாவது சதத்தை கடந்து 114 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீராட் கோஹ்லி 66 ஓட்டங்களும், சுரேஷ் ரெய்னா 51 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, 290 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால் 70 ஓட்டங்களும், நசிமுடின் 5 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஜக்ருல் இஸ்லாம் 53 ஓட்டங்களும், நசிர் ஹுசைன் 54 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்கதேச அணி 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
விளையாட்டு >