டோனி விக்கெட் காப்பில் ஈடுபடக்கூடாது: சங்கக்காரா

posted May 1, 2012, 12:07 AM by Rasanayagam Vimalachandran
 
இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி இனிமேல் விக்கெட் காப்பில் ஈடுபடக்கூடாது என்று இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரரும், முன்னாள் அணித்தலைவருமான குமாரா சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

விக்கெட் காப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்வை தொடங்கிய சங்கக்காரா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக பிரகாசிக்க தொடங்கியதும் விக்கெட் காப்புப் பணியில் ஈடுபடுவதை நிறுத்தினார்.

தனித்த துடுப்பாட்ட வீரராக விளையாடத் தொடங்கியதன் பின்பு சங்கக்கார அதிகமான ஓட்டங்களைக் குவிக்கத் தொடங்கியதுடன், அவரது சராசரியும் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.

இலங்கை அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், டி20 சர்வதேசப் போட்டிகளிலும் சங்கக்காரா விக்கெட் காப்பில் ஈடுபடுகின்ற போதிலும், டினேஷ் சந்திமாலின் எழுச்சி காரணமாக இனிவரும் விக்கெட் காப்பில் சந்திமால் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், நடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டிகளில் சங்கக்காரா விக்கெட் காப்பில் ஈடுபடுவதில்லை.

இந்நிலையில் டோனியின் கிரிக்கெட் வாழ்வும் முக்கியமான கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிவித்த சங்கக்காரா, டெஸ்ட் போட்டிகளில் டோனி விக்கெட் காப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

டோனியின் டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி அவரது உண்மையான திறமையை வெளிப்படுத்துவதில்லை. அவர் அணித்தலைவராகவும், துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் செயற்படுவதன் காரணமாகவே டோனிக்கு இந்த நிலை காணப்படுகிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், டோனி மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர். ஆனால், வேலைப்பழு காரணமாக அவரால் முழுத்திறமையையும் வெளிப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

சங்கக்காரா, கிரிக்கெட்டின் பைபிள் என்றழைக்கப்படும் விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments