ஆகாஷைத் தொடர்ந்து வரும் ஆகாஷ்-2 டேப்லெட்!

posted Feb 28, 2012, 9:59 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 28, 2012, 10:02 AM ]
டேட்டாவின்ட் மற்றும் மத்திய அரசும் சேர்ந்து குறைந்த விலை ஆகாஷ் டேப்லெட்டை முதன் முதலாக அறிமுகப்படுத்திய போது டேப்லெட் உலகமே பரவசத்தில் மூழ்கியது. அடுத்ததாக ஆகாஷ் 2 டேப்லெட் அறிவிக்கப்பட்ட போது மீண்டும் உற்சாகம் அதிகரித்தது. ஏனெனில் ஆகாஷைவிட மேம்பட்ட தொழில் நுட்பத்தில் வரும் என்று நம்பப்பட்டது.

ஆகாஷ் கனடாவைச் சேர்ந்த டேட்டாவின்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆகாஷ் 2 தயாரிப்பிலிருந்து டேட்டாவின்ட் விலகிவிட்டது. எனவே இந்த புதிய ஆகாஷ்2 டேப்லெட் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே, இந்தியர்களால் தயாரிக்கப்பட உள்ளது. ஆகவே இதை ஒரு இந்திய டேப்லெட் என்று அழைக்கலாம்.

ஆகாஷ் டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.2 இயங்குதளத்தைக் கொண்டிருந்தது. அதனால் ஆகாஷ் 2 ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதுபோல் இதன் ரேம் 1ஜிபியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதுபோல் ஆகாஷ் டேப்லெட் 366 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட ஆர்ம் 11 ப்ராசஸரைக் கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆகாஷ் 2 டேப்லெட்  700 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட எ8 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இந்த புதிய டேப்லெட்டின் திரை 7 இன்ச் அளவில் இருக்கும். இந்த திரை 800 x 480 பிக்சல் ரிசலூசனை வழங்கும். அதுபோல் இந்த புதிய டேப்லெட் 3200 எம்எஎச் மின் திறனைக் கொண்டிருக்கும்.

இன்டர்நெட் வசதிக்காக ஆகாஷ் டேப்லெட் வைபை மற்றும் ஜிபிஆர்எஸ் ஆகியவற்றை மட்டும் கொண்டிருந்தது. ஆனால் ஆகாஷ் 2 மேற்சொன்ன வசதிகளோடு 2ஜியைும் கொண்டிருக்கும். அதுபோல் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை ஆகாஷ் டேப்லெட்டில் பதிவிறக்கும் செய்யும் போது சில பிரச்சினைகள் இருந்தன.

ஆனால் அந்த பிரச்சினைகள் இந்த ஆகாஷ் 2 டேப்லெட்டில் இருக்காது என நம்பலாம். அதுபோல் இதன் பின்பக்க கேமராவைப் பற்றிய தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வீடியோ உரையாடலுக்காக முகப்பு கேமரா இந்த டேப்லெட்டில் உண்டு.

ஆகாஷ் டேப்லெட்டில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இந்த புதிய டேப்லெட்டில் அத்தகைய பிரச்சினைகள் எல்லாம் களையப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய டேப்லெட் வரும் ஏப்ரலில் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது.


Comments