மிதுன இராசி அன்பர்களே…

posted Jun 15, 2014, 10:44 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 15, 2014, 10:44 AM ]
19.6.2014 வியாழன் அன்று உங்கள் ஜென்ம இராசியை விட்டு 2-ம் இடத்திற்கு குரு பகவான் பிரவேசிக்க போகிறார். குரு உங்கள் இராசிக்கு 7,10-க்குரியவன். அதாவது சப்தமாதிபதி, ஜீவனாதிபதி. உங்கள் இராசிக்கு 2-ல் அமரும் குரு, 6-ம் இடம், 8-ம் இடம், 10-ம் இடங்களை பார்வை செய்ய போகிறார். 6-ஆம் இடம் என்பது, கடன், நோய்நொடி அறியப்படும் இடமாகும். அவை தீரப்போகிறது. 8-ம் இடம் வழக்கு தொல்லைகள் அறியப்படும் இடமாகும். வீண் வழக்குகள் விலகப் போகிறது. 10-ம் இடம் தொழில்துறையை பற்றி அறியப்படும் இடமாகும். தொழில், வியபாரம் புத்துணர்ச்சி பெற்று பிரமாதமாக நடக்க இருக்கிறது. சொத்துக்கள் மீது வழக்கு இருந்தாலும் குருவின் பேரருளால் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக இருந்த பங்காளி சண்டைகளும் சுமுக தீர்வுக்கு வரும். தடைபட்ட கல்வி தொடரும். பயணங்கள், அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் அதனால் நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள்.


உத்தியோகம் செய்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் விரோதம் செய்யாமல் அனுசரித்து போவது நல்லது. சிலருக்கு உத்தியோக மாற்றம் ஏற்படலாம். 6-ம் இடத்தை குரு பார்வை செய்வதின் காரணமாக, யாருடைய ஜாமீனுக்கும் துணை போக வேண்டாம். தேவையில்லாமல் மற்றவர்களின் பிரச்னையில் தலையிடவும் வேண்டாம். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு 2-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், புத்திர-புத்திரிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பார். பாக்கிய ஸ்தானத்திற்கு விரயஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், பெற்றோரின் உடல்நலனுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டிய காலம் இது.


சகோதரஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், அவர்களிடம் மனக்கசப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக 2-ம் இடத்தில் உள்ள குரு நன்மைகளையே செய்தாலும் கூட, அவசரமாக எதையும் சிந்திக்காமல் செய்ய வேண்டாம். அகலகால் வைக்க வேண்டாம். 10-ஆம் இடத்தை குரு பார்வை செய்வது நன்மைதான். ஆனால் பெரும் முதலீடு செய்யாமல் நிதானமாக செய்வது நன்மையை தரும். பிள்ளையாரை வணங்குங்கள். தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி வழிபட்டு முன்னேறுங்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.
Comments