மண்டூர் முருகன் ஆலயம்

மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்டபாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் அதனோடு கூடிய பண்பாட்டுக் கோலங்களையும் இயற்கையோடு இயைந்தவழிபாட்டையும் கட்டிக்காக்கின்ற பெருமை மண்டூர் ஆலயத்திற்கே உண்டு. இதன் அடிப்படைமாறாதிருப்பது சிறப்பானதொன்று. இதே சிறப்பியல்புகள் இப்பிரதேசத்திற்கு அப்பால் கதிர்காமத்திலும் பேணப்படுகின்றது. மட்;டக்களப்பின் தென்கோடியில் சுமார் 30 மைல் தொலைவில் பரந்த வாவிக்கரையில் அமைந்துள்ள ஊரே மண்டூராகும். பண்டைய நாட்களில் இருந்து தில்லமைரங்கள் இக்கோயிற் பகுதியில் அதிகமாக இருந்தமையினாலும் கவிஞர்களும், பக்தர்களும் இவ்விடத்ததை தில்லை மண்டூர் என்றே வழங்குகின்றனர்.கிழக்கிலங்கையில் மிகவும் பழமையும், பிரசித்தமாகவும் இருந்த முருகன் கோயில்கள் திருப்படைக் கோயில்கள் என்றும் அழைக்கப் பெற்றன. பண்டைய அரசனின் மதிப்பு.மானியங்களும், சீர்வரிசைகளும், நிருவாக அமைப்பும் பெற்ற கோயிலே இது. அதனால் இதனை தேசத்துக்கோயில் என்றும் அழைப்பர். இப்புகழ்மிக்க கோயிலின் தோற்றம் சீர்பாதகுலத்தோடு தொடர்புடையது.

சீர்பாததேவியும் அவருடன் வந்தவர்களும் வீரமுனையலே வந்திறங்கி விநாயகருக்கு ஆலயம் அமைத்த போது அவர்கள் தங்களுடன் பாதுகாப்பிற்காக கொண்டு வந்த வேலினையும் அங்கு வைத்து வழிபட்டனர். இவ்வாறு வழிபட்டு வந்த பாலப்பகுதியில் சீர்பாத குலத்தவரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்கிடமிருந்து பிரிந்த சிந்தன் அங்கிருந்த தங்க வேலினை எடுத்து வந்து  மண்டூர் தில்லை மரத்தடியில் மறைத்து விட்டு துறைநீலாவணையில் வந்து வாழ்ந்தான் இதனால் சிந்தாத்திரன் குடியினர் அதிகமாக வாழும் இடமாக  துறைநீலாவணை கிராமம் விளங்குகின்றது.

தில்லைமரத்தடியில் வேலினைக் கண்ட அப்பகுதி ஆதிவேடர்கள்(நாதனை வேடுவர்கள்) கொத்து பந்தல் அமைத்து வழிபடப்பட்டனர்.. இதன் பின்னர் சிந்தன்  தான் கொண்டு வந்த தங்கவேல் அங்கு கொத்துப்பந்தல் அமைக்கப்பட்டு வழிபடுவதை அறிந்து தன் உறவினர்களோடு சேர்ந்து அதற்கு பூசை செய்தான். ஆகையினால்தான் இன்று சிந்தாத்திரன் குடிவழிவந்த மரபினரே பெரிய கப்புகனராக இருந்து பூசை செய்து வருகின்றனர். இதில் உதவிக் கப்புகனராக வேடர்களைக் கொண்டு; பூசை செய்யப்படுகின்றது.

பின்னர் இவர்களோடு குருமண்வெளி, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு போன்ற நான்கு ஊர்மக்களும் இணைந்து அதற்கு தில்லைமண்டூர் முருகன் ஆலயம் என நாமம் சூட்டி வழிபட்டனர். மட்டக்களப்பு தழிழகத்திலே கோயில் வழிபாட்டோடும் நடைமுறைகளோடும் வேளாளர் தொடர்புடையவர்களாக இருந்தனர் இதனால் 20 வேளாளர்கள் சாமி துக்குவதற்குக் கொண்டுவந்தனர் இதில் 20 வேளாளருக்கும் ஒரு தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். இத்தகைய வழிவந்தோரே வண்ணக்கராகக் காணப்படுகின்றனர். இவர்கள் இன்று வேளாளகுலத்தின் கவுத்தன் குடியைச் சேர்ந்தவர்களாக உள்ளதோடு வண்ணக்கர் தெரிவு செய்வதில் போட்டி ஏற்படுவதால் நான்கு கணக்கப்பிள்ளைகளும் தங்கள் விருப்பத்தின் பேரில் வண்ணக்கர் தெரிவு செய்யும் உரிமையுடையவர்களாக இருக்கின்றனர். 

நிருவாகத்தில் மட்டுமன்றி திருவிழாக்காலங்களில் நடைபெறும் பூசைகளிலும் சீர்பாத குலத்தவர் தொடர்புபட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் ஆவணிமாதப் பூரணையில் அன்று தீர்த்தத் திருவிழாவும் அதற்கு முன்னருள்ள இருபது நாட்களும் திருவிழாக்கள் நடக்கத்தக்கதாக, கதிர்காமத்தீர்த்தம் கழித்து 10ம் நாள் (ஆடி மாதப் பூரணையின் பின் வரும் 10ம் நாள்) மண்டூர் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் நடைபெறும். 

இக்கொடியேற்றம் வெல்லாவெளி பிரதேச செயலாளர், நான்கு வண்ணக்கர் மாரிடம் சம்மதம் கேட்டபின்னரே நடைபெறுவது வழக்கமாகும். 11ம் திருவிழாத் தொடக்கம் 20ம் திருவிழாக்கள் வரை சுற்று வட்டத் திருவிழாக்கள் காலையும், மாலையும் நடைபெறும். இத்திருவிழாக்களில் அதிகமான திருவிழாக்கள் சீர்பாத குலத்தினரையே சார்ந்துள்ளது.

11ம் நாள் திருவிழாவின் போது சீர்பாத குலத்தவரான ஞானி குடிமக்கள் புஸ்பவிமான புண்ணியதான சங்கர்ப்பம் செய்யும் உரிமையுடையவர்காளகவுள்ளனர். 12ம் திருவிழா குருமண்வெளி, வீரமுனை, மண்டூர் சீர்பாதகுலத்தவர்களால்; நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் 13ம், 15ம், நாட்களில் துறைநீலாவணைமக்களும், 14, 16ம் திருவிழா குருமண்வெளி மக்களாலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் தீர்த்த உற்சவத்தின் பிறகு தீர்த்தக்கரையில் நானகு ஊர் மக்களும் கௌரவிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மஞ்சட்காப்பு மாலையும், பட்டு தீர்த்தமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகி;ன்றனர். இதேபோன்று காளஞ்சி  வழங்கும் போதும் நடைபெறுகின்றது. இது தவிர கந்த சஸ்டிவிரதத்தில் படிக்கப்படும். திருச்செந்தூர் புராணம்  ஏடுவளங்கும் முறை அதாவது படிக்கும் முறையும் பொருள் சொல்லும் முறையும் ஒரு வருடத்திற்கு ஒரு கிராமம் என்றவகையிலும். சீர்பாத குலமக்கள் உரிமையுடையவர்;களாகின்றனர். இதில் இடம்பெறும் கல்யாணப்பூசை சீர்hபத குலத்தவருக்கே உரியது. இவையனைத்தும் மண்டூர் முருகன் ஆலயம் சீர்பாத குலமக்களோடு உள்ள தொடர்புகளை காட்டி நிற்பது சீர்பாதகுலத்தவருக்கும் மண்டூர் முருகன் ஆலயத்திற்குமான மிக நெருக்கமான தொடர்பினை சுட்டி நிற்கின்றது.