சீர்பாதரின் குடி அமைப்பு

ஒரு பொதுவான மூதாதயரில் இருந்து தம்மை பரம்பரையாக்கப்பட்டவர்களாக கருதும் சமூகரீதியாக வரையறுக்கப்பட்ட உறுப்பினர்களிடையே ஒருவழி உறவு முறையில் அமைந்த குழு குடியாகும். அதாவது புகழ் மிக்க ஆண் அல்லது பெண் ஒருவரின் ஊடாகவே இக்குடிகள் தேற்றுவிக்கப்படுகின்றன இரண்டு பெயர்களைக் கொண்டு குடிகள் அமையாத அதேவேளை ஒரே குடிகளுக்குள் திருமணம் என்பதும் தவிர்கப்பட்டிருக்கும். அனுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று பருமக வழிவந்தோர் பருமககுடி என அழைக்கப்பட்டது என கூறுகின்றது. இதில் பருமக என்பது பெருமகன் என்ற தமிழ் சொல்லின் பிரகிருதி வடிவமாகும் ஆரம்பகாலங்களில் சமுகத்தில் செல்வாக்கு பெற்ற தலைவனைக் குறிக்க இப் பெயர் பயன்பட்டது. பின் அவனின் வழித்தோன்றல்களின் பரம்பரையை சுட்டிக்காட்ட பயன்பட்டது. ஆக குடி என்பது, பருமக வழிவந்தோரைக் குறிக்கின்றது இதனால் குடியில் யாவரும் ஒரு குழு முதல்வரையோ அல்லது முதல் தலைவியையோ உடையவர்களாக விளங்குகின்றனர்.

மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசமானது சாதிகளாகவும் அவை குடிகளாகவும் பிரிக்கப்பட்ட கட்டமைப்பினையே கொண்டிருக்கிறன. இவ்வகையில் சீர்பாத குலமும் குடிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. குடிகள் பருமக வழிவந்தோர் என்பதனால் சீர்பாத தேவிக்கு துனையாக வந்த சிந்தன், காங்கேயன், கால தேவன், பெண்பழச்சி, வெள்ளாயி, நரையாகி, முழவன் போன்ற தலைவன் தலைவிகளின் பெயர்களைக் கொண்டு சிந்தாத்திரன்குடியும், காங்கேயன்குடியும், பெண்பழச்சிகுடியும் (பொட்டப்பழச்சி), காலதேவன்குடியும், வெள்ளாயிகுடியும் நரையாகிகுடியும், முழவன் குடியும் என ஏழு சீர்பாத குடிகள் தோற்றம் பெற்றது. இவையே ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட சீர்பாதகுலக் குடிகளாகும். இதன்பின் துறைநீலாவணை செப்பேட்டில் மேற் கூறப்பட்ட ஏழு குடிகளோடு பாட்டுவாழிகுடி, படையன்குடி, பரதேசிகுடி, ஞானிகுடி, என 11 குடியாக வகுக்கப்பட்டுள்ளது. இங்கே சிந்தன், பழையன், காங்கேயன், கால தேவன், வெள்ளாகி நரையாகி, முழவன் போன்ற பெயர்களிலே குடிகள் தோற்றம் பெற்றுள்ளன.

சீர்பாதக் குடிகளிளோடு பின்னர் இணைக்கப்பட்ட குடிகளாக செம்பக நாச்சி குடி, கோப்பி குடி (ஊசாடி குடி), வெல்வேலன் குடி போன்றவையும் விளங்குகின்றன. இக்குடிகளைச் சேர்ந்த மக்கள் துறைநீலாவணைக் கிராமத்தில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் பரதேசி குடி, ஞானி குடி, அவியர குடி என்பன சீர்பாதக் குடிகளிலே கால ஓட்டத்தில் சேர்ந்தவையாகும். இக்குடிகளைச் சேர்ந்த மக்கள் குறுமண் வெளியில் வாழ்கின்றனர். பரதேசி குடியினை சேர்ந்த மக்கள் வீரமுனையிலும் வாழ்கின்றனர்.

சீர்பாதகுடிகள் பற்றி முதலில் கூறிய செப்பெடு கொக்கட்டிசோலை செப்பேடாகும் “துறைபேர் வீகண்டர்….” எனத் தொடங்கும் பாடலில் சிந்தாத்திரன், காலதேவன், காங்கேயன், வெள்ளாகி, நரையாகி, முடவன், பெண்பழச்சி எனும் 7 குடிகளை சீர்பாதகுலமாக மன்னன் வகுத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் சீர்பாத குலமாக வாழ்து வருகின்ற காலகட்டத்தில்; பாட்டுவழிகுடி, செம்பகநாச்சிகுடி. பரதேசிகுடி, உசாடிகுடி, ஞானிகுடி, படையான்டகுடி என 6 குடிகள் சேர்ந்து சீர்பாத குடிகள் 13ஆக மாறியது. ஆதலால் சீர்பாதகுலச் சாதிரீதியாக இறுக்கத்தன்மை பேணாது நெகிழ்வுத் தன்மையோடு வாழ்ந்து பல சாதிமக்களையும் உள்வாங்கியிருக்கும் ஒரு ஒற்றுமை மிக்க குலமாகும் .
 
சாதிகளுக்குள்ளே பல குடிகள் அமைந்ததைப் போன்று குடிகளுக்குள்ளே பல பிரிப்புக்கள் காணப்படுகின்றன இவற்றை வகுத்துவார், தத்தியார், கத்தறை, எனப் பெயரிட்டு அழைப்பது தமிழ் மரபாகும்;. இவ்வகையில் வீரமுனையில் சயினியர் தத்தி, விதானையார் தத்தி, பழனியாண்டியர் தத்தி போன்ற பல தத்திகள் காணப்படுகின்றன.