சீர்பாத குலத்தவரின் பிற அம்சங்கள்

மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் சமுக அமைப்பின் உருவத்தினை உருவாக்கிக் கொள்கின்றனர் அது ஒருசங்கமாகவோ அல்லது குழுவாகவோ அல்லது நில அமைப்புக்களாகவோ இருக்கலாம். இவை சமூகம் இயங்குவதற்கான கருவிகளாகும. இதனால்தான் சமூக அமைப்பும் அதன் செயற்பாடும் ஏதோ ஒரு வகையான சமநிலையைக் கொண்ட சமுகம் என்பர். சமூக அமைப்பின் அம்சங்களை குடும்பம், திருமணம், பொருளாதாரம் (தொழில்), வருமானம், கல்வி, அரச பங்கேற்பு, நிருவாகம் போன்ற பல அமைப்புக்களை நோக்க வேண்டியுள்ளது இவ்வாறான அம்சங்களே ஒரு சமூகக் கட்டமைப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
சமயம்
மேலும் சீர்பாத குலத்தவர்கள் “பசுவை” தெய்வமாக வழிபட்டவர்களாகவும் அதிக கால்நடைகளை வளர்ப்பவர்களாகவும் உள்ளனர். இவர்கள் சோழ மரபினர்கள் ஆகையால்; அதிகமாக பசுக்கள் வளர்கின்றமை மரபாகின்றது. இங்கு பசுவுக்கென்று தனியான வழிபாட்டு முறைகளும்(பட்டிப் பொங்கல்) உள்ளன. 
   
சீர்பாத சமூகத்தினர் மிகவும் பக்தியுடையவர்களாகவும் வெளிப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. இது அவர்களது வரலாற்றோடு தொடபுடையதாகவும் உள்ளது இவர்கள் கோவிலுக்காக அதிக சேவைகள் செய்பவர்களாகவும், நேர்;த்திக்கடன் நிறைவேறறுபவர்களாகவும் உள்ளனர். அத்தோடு சீர்பாதகுலத்தவர்கள் வாழும் இடங்களில் மூன்று அல்லது ஐந்திற்கு மேற்பட்ட ஆலயங்கள் உள்ளதும் அதிலும் பிள்ளையார் வழிபாட்டோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளனர்.

திருமணம்
மனித இனம் தன்பால் உந்துதலை ஒரு நிறுவன அமைப்பிற்குள் நிறைவு செய்ய ஏற்படுத்திய முறையே திருமணமாகும். உயர்பாலூட்டிகளிடமும் பிற கீழின விலங்குகளிடமும் பாலுறவு ஒரு உயிரியில் செயலாக மட்டுமே நிகழ்கின்றது. ஆனால் மனிதர்கள் சமூதாய- பன்பாட்டு விலங்காதலால் அவ்வுயிரியல் செயலை “திருமணம்” என்னும் நிறுவனச் செயலாக்கி அவர்கள் தம் உள- உயிரியல் உந்துதல்களை நிறைவு செய்து கொள்கின்றனர்;. சமூதாயம், பண்பாடு ஆகிய இரண்டும் மனிதன் அவனது வாழ்வியல் தேவைகளை ஈடுசெய்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட கருவியே. அதனால்தான் இடம் ,காலம், சூழலுக்கு ஏற்ப அக்கருவியை தன் விருப்பம் போல் இயக்கிக் கொள்கின்றான். அதனால் அக்கருவியின் பயன் தன்மை பல வடிவங்களாகக் காணப்படுகின்றது. பண்பாடு என்னும் அமைப்பும் (கருவி) பலவடிவங்களில் மனித சமூதாயத்தில் செயல்படுகின்றது. மனித விருப்பத்தால் ஏற்பட்ட இந்த ஒவ்வொரு வடிவத்திற்கென்றும் தனித்தனியான விதிமுறைகள், செயல் தன்மைகள், பண்பாடுகள் ஏற்பட்டன. (பக்தவத்சலபாரதி. 1992;: 378 ) 

ஆண் ஒரு குடியிலும் பெண் வேறு குடியிலுமாக அமைந்த சம்பந்தமே இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமண சம்பந்தமாகும். சகோதரனின் மகனோ அல்லது மகளோ சகோதரியின் மகளையோ அல்லது மகனையோ திருமணம் செய்வதையே ஏற்றுக்  கொள்ளப்பட்ட சமூகக் கொள்கையாக அமைந்துவந்தது. ஆனால் இன்று பெற்றோர் உடன்பிறந்தவர்களை திருமணம் செய்வதால் அங்கவீனமான குழந்தைகள் பிறப்பதாக கருதி, இம்முறை படித்தவர்களிடம்குறைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு வேறுகுலத்தவரிடையே சென்று திருமணம் புரிவதைவிட இக்குலத்தில்திருமணம் செய்வது சிறப்பானதாக கருதுகின்றனர். திருமணம் என்பதற்கு கலியாணம், கண்னாலம், வதுவை, மணவணி, மணவினை, விவாகம் என பல பெயர்களும் உள்ளன சீர்பாத குல மக்களின் திருமண சம்பந்தமானது பின்வருமாறு அமைந்து விடுகின்றது 
                                    1. பெற்றேர்ர் சாணைக்குறியிடுவதன் மூலம் சாணைத்திருமணம் 
                                    2. பெற்றோர் தேர்ந்தெடுப்பதன் மூலம் பேச்சுத்திருமணம் 
                                    3. ஆணும் பெண்னும் தாங்களாகவே விரும்புவதன் மூலம் காதல் திருமணம் என்பனவாகும்.

குழந்தையை பிரசவிக்கும் வேளையில் பிறந்த குழந்தையை கழுவிய் பின்னர் உடனிருந்தும் உதவிபுரியும் மச்சாள் இந்நதப்பிள்ளைக்கு எனது இன்ன மகனே மணமகனாவான் எனக் கூறி பிள்ளையின் வயிற்றின் மீது மடித்த சீலைத் துண்டொன்றை போடுவாள் குழந்தையின் உபயோகத்திற்கு பயன் படும் துணிகளை சாணை என்னும் பெயரால் வழங்குவது வழக்கு. அவ்வகையில் குழந்தையின் மீது போடப்பெற்ற  சீலையும் சாணையாகின்றது இதுவே சாணைக்குறியென்று அழைக்கப்பட்டது. இவ்வாறு சாணைக்குறி மூலம் தீர்மாணிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் வளர்ந்து உரிய பருவம் அடைந்நததும் இவர்களுக்கு திருமணம் நடாத்தி வைக்கப்படுகின்றது. இவ்வாறு சாணைக்குறியிடுவதன் மூலம் ஏற்படும் திருமண வாழ்க்;கை தற்காலத்தில் மறைந்து செல்வதை காணக்கூடியதாகவும் உள்ள்ளது. ஆணும் பெண்னும் ஒருவரையொருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்று திருமணம் செய்வர் இத்திருமணம் பெற்றார் விருப்பத்துடனும் அன்றேல் பெற்றார் விருப்பிமின்றியும் நடை பெறலாம். 

தற்காலத்தில் சோதிடப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே பெருவழக்காக உள்ளது திருமணப் பொருத்தம் பார்த்தல் என்பது ஆணினதும் பெண்ணினதும் பிறந்த சோதிடக் குறிப்புகளைக் கொண்டு சோதிடர் நிபுணர்த்துவம் மூலமாக பொருத்தம் பார்த்தல். அப்பொருத்தங்கள் பதினான்காகும் இருந்தாலும் பெரும்பான்மை பத்துப் பொருத்தங்களே உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவைகளும் கிரகப் பொருத்தத்துடன் நட்சத்திரப, பொருத்தம், கணப்பொருத்தம், இரட்சிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம் ஆகிய ஐந்தும் முக்கியமானதாகும் இவை ஐந்திலும் யோனிப் பொருத்தம் இரட்சிப்பொருத்தத்துடன் சேர்ந்து  பொருந்த வேண்டும் இவ்வாறு பார்க்கப்பட்ட பொருத்தம் பெரும் பான்மை பொருந்துமாயின் மட்டுமே திருமணப் பேச்சுவார்த்தை தொடரப்படும்.

இரு பகுதியினரிடையேயும் பொருத்தம் திருப்தியாக அமைந்ததை தொடர்ந்து பெண்ணின் தந்தை, தாய் மாமன், நெருங்கிய உறவினர் சேர்ந்த குழுவொன்று ஆணின் வீட்டுக்குச் சென்று சம்பந்தம் பேசுவர் மேற்படி சென்ற பெண் வீட்டாரை ஆண் வீட்டார் வரவேற்று உபசரிப்பர் அவ்விருந்துபசாரத்தின் பின்பு ஆண் வீட்டார் பெண் வீட்டாரிடம் வந்துள்ள நோக்கத்தைப் பற்றி வினாவ பெண்ணின் தந்தை நோக்கத்தை வெளிப்படுத்துவார் சில இடங்களில் அக் குழுவின் மதிப்பிற்குரி ஒருவராலும் நோக்கம் வெளிப்படுத்தப்படும் இக்கலந்துரையாடலில் சீதனம் பற்றிய பேச்சுவார்;த்தைகளும் இடம் பெறும் சீதனம் என்பது வீடு, காணி, நகை, பணம் முதலியவற்றை பெண் வீட்டார் மணமக்களுக்கு வழங்குவதைக் குறிக்கும்.

பிறகு மணமக்களுக்கு ஆறுமாத உணவு வழங்கல் முதல் பிரசவத்தின் செலவுகளை ஏற்று நடத்தல் என்பன இங்கு பாரம்பரிய வழக்கமாகும். பெற்றோர் தம்மிடமுள்ள நில புலங்களை பெண்பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப பங்கீடு செய்து அவர்களின் பங்கினை சீதனமாகக் கொடுப்பதும் இதனுள் உள்ளடங்கும் எனினும் நில புலன்கள் வழங்குவது கட்டாயமானதல்ல “குடியிருக்க மனையும் ஆறுமாதச் சோறும்” என்பது இங்கு முதியோர் மொழியாக உள்ளது. பெண்பிள்ளைக்கு வீடு, சீதனம் என்பது இலட்சுமி கரமான செல்வம் என்பதாகும். வரதட்சணையெனவும் கூறுவர் வரதட்சணை என்பது மணமகனுக்கு வழங்கும் தட்சணை என்பதாகும் ஆதியில் ஆண் வீட்டார் கொடுப்பதாக இருந்து தற்போது பெண் வீட்டார் கொடுப்பதாக மாறிற்று. 

இங்கு ஒரே குடிக்குள் திருமணம் நடைபெறாது. இங்கு ஒரே குடித்திருமணத்தை தகாப் புணர்ச்சியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. சீர்பாத குலக் குடிகள் எவை எவை முறையான குடிகள் என ஒருவரையறை உண்டு. அதில் சிந்தாத்திரன் குடியினர் பாட்டுவாழி குடி, முடவன் குடி இரண்டிற்கும் மண உறவு சம்மந்தக் குடிகளாகும். இதனால் சிந்தாத்திரன் குடிக்கு இவையிரண்டும் “மைத்துனன் குடி” என்றழைக்கப்படுவது மரபாகும். இவ் மரபு அவர்களது வாழ்கையில் பேணப்பட்டு இக்குடிகள் தங்களுக்குள் திருமணம் செய்கின்றமை பெருமைக்குரிய விடயமாகக் கொள்ளப்படுகின்றது. 

சிந்தாத்திரன், பாட்டுவாழி இரண்டினதும் திருமணசம்மந்தம் பற்றிய வாய்மொழி மரபிலான வரலாற்றுக்கதை ஒன்று உண்டு. சிந்தன்வழி வந்தோன் - கோரைக்கிளப்பில் சிவக் கொழுந்து என்னும் பெண்ணைக் கொண்டுவந்து திருமணம் செய்த போது சிவக்கொழுந்துவின் அண்ணன் “தங்கையின் வழித்தோன்றல்கள் சிந்தாத்திரன் குடி வழியினரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினானாம்” அது மரபு வழி பேணப்பட்டு வந்தமையினாலே பாட்டுவாழி குடி சிந்தாத்திரன் குடிக்கு மைத்துனன் குடியாகின்றன. இதனைப் போல முடவன் குடிப்பெண் ஆரம்பத்தில் சிந்தாத்திரன் குடிப் பெண்ணைத்திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. இக் குடிகளைப் போன்று செம்பகநாச்சி குடிகளும் அதிகமாக ஊசாடி குடி வழியினரை திருமண உறவு கொள்ளும் குடியினராக உள்ளனர். இதனைத்தவிர ஒரேகுடிக்குள் திருமணம் செய்யாது எல்லோரும் எல்லாக் குடிவழியிலும் திருமணம் செய்கின்றனர். இங்கு பொருளாதார நிலையே திருமணத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. 

சீர்பபாத சமூகத்தினர் வேறு சமூகத்தவருடன் திமணம் செய்தல் கல்வி கற்ற அரசாங்க தொழில் புரிபவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கு சீர்பாத குலத்தில் படித்து தொழில் பெற்ற இளைஞர்கள் தங்கள் எதிர்கால வாழ்கையில் பெருளாதாரமும், நவீனத்துவம் இவை இரண்டையும் அடிப்படைக் காரணங்களாகக் கொண்டு வேறு சமூகத்தில் திருமணபந்தத்தில் இணைகின்றனர். புறத்திருமணமோ, அகத்திருமணமோ இங்கு சீதனம் என்பது முக்கியமாக உள்ளது. அதில் கல்வி கற்று தொழில் புரிபவரிடம் அதிகம் எனலாம். இங்கு தாய்வழி உரிமை பேணப்படுவதால் பெண்வீட்டாரே திருமணமான குடும்பத்திற்கு எதிர்கால வாழ்வை வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுப்பர் அதனால் பிள்ளைக்கு வீடு, வயல், மற்றும் வீட்டுப் பொருட்கள் என்பன அவ் வீட்டின் பொருளாதார வசதிக்கு ஏற்ப பங்கிட்டுக் கொடுப்பர்.

குடும்பம்
மனித சமூதாயத்தின் மிகத் தொன்மையான நிறுவனமாகத்திகழ்வது குடும்பமாகும். இது எல்லாச் சமூகத்திலும் எல்லாக்காலங்களிலும் நிலவி வருகின்றது. மானிட வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே நிலவி வருகின்றது. இன்று நூற்றுக் கணக்கான சமூதாயங்கள் காலங்காலமாக பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டு  அதன் அமைப்பாலும் செயலாலும் வேறுபடுகின்றன. ஆனால் அனைத்திலும் குடும்பமே இன்றியமையாத, அடிப்படை அலகாக செயற்படுகின்றது. அவ்வாறே மக்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற குழுக்களில் பங்கு பற்றி அவர்கள் வாழ்கைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டாலும். குடும்பம் என்னும் அமைப்பே முதலிடம் பெறுகின்றது.

குடும்பம் என்பது ஒரு சிறிய குழுவாகவும் இருக்கலாம். பலர் அடங்கிய ஒரு பெருங்குழுவாகவும் இருக்கலாம். இதில் குறைந்த அளவு ஒரு ஆணும் பெண்ணும் இடம்பெற வேண்டும். இவ்விருவரும் அவர்களது சமூதாயம் ஏற்றுக் கொண்ட திருமண முறைப்படி திருமணம் செய்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு ஆணும் பெண்ணும் கணவன் - மனைவி என்னும் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் போதுதான் அவர்கள் குடும்பம் வகைக்குள் உள்ளடக்கப்படுகின்றார்கள். அவர்கள் ஒரே கூரையின் கீழ் உண்டு வாழ்ந்தாலும். காலத்தின் கட்டாயத்தால் தனித்தனியாக உண்டு வாழ்ந்தாலும் கணவன் - மனைவி என்னும் பிணைப்பைக் கொண்டுள்ளவரை அவர்கள் குடும்பம் என்னும் அமைப்பைக் கொண்டவர்களாவர்.

குடும்பம் என்னும் அமைப்பானது, ஓர் ஆணும் பெண்ணும் அவர்களுடைய சமூதாய மரபுப்படி மணவாழ்வில் ஈடுபடும் நிலையால் மட்டுமே தோன்ற முடியும். அவ்வாறு இணைந்தால்தான் அச்சமூதாயத்தில் அவர்கள் ஒரு குடும்பமாக ஏற்றுக் கொள்ளப்படுவர்;. அவ்வாறின்றி ஒரே வீட்டில் ஓர் ஆணும் பெண்ணும் காதலர்களாகவோ அல்லது வேறு வகையிலோ உறவு பெற்று உண்டு மகிழ்ந்து வந்தாலும் அவர்களிடையே சமூதாயம் ஏற்றுக் கொள்ளக் கூடிய கணவன் - மனைவி அமையாத உறவு வரை அவர்கள் குடும்பம் என்னும் அமைப்பை உருவாக்க முடியாது. இக் குடும்பம் என்னும்  அங்கீகாரம் அந்தச் சமூதாயத்தின் அகவயக் கருத்தாக்கத்தின் மூலமே அளிக்கப்படும். சில பழங் குடிகளில் காதலர்கள் திருமணத்திற்கு முன்னரே ஒரு குடிசையில் ஒன்று சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவர். சிலகாலம்கழித்துத்தான் திருமணம் நடைபெறும். ஆயினும் இப்பழங் குடிகள் திருமணத்திற்கு முன்னர் வாழும் நிலையில் இருந்தே குடும்பம் ஏற்பட்டு விடுகின்றதென்று எண்ணுகின்றனர்.


சீர்பாத குல குடும்ப அமைப்பு முறையினை நேக்குகையில் இங்கு இரண்டு வகையான குடும்ப அமைப்பு காணப்படுகின்றது. அவை தனிக் குடும்பம், கிளை வழி கூட்டுக் குடும்ப முறைகளே தனிக் குடும்ப முறையானது வீரமுனை உட்பட்ட சீர்பாத மக்கள் வாழ்கின்ற இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. இங்கு தனிக் குடும்ப முறையை எடுத்துக் கொண்டால் 5அல்லது 6 பிள்ளைகள் அடங்கலாயிருக்கும். இவ்வமைப்பில் அரசாங்கத் தொழில் செய்வேராக இருந்தால் தங்கள் பிள்ளைகளை பராமரிப்பதற்காக மனைவியின் பெற்றோரையோ அல்லது கணவனின் பெற்றோரையோ தங்கள் வீட்டில் வைத்திருப்பது வழக்கமாகும். அது மட்டுமன்றி பேச்சித்திருமணங்கள் மூலம் அமையும் குடும்பங்களில் பெண்பிள்ளையின் பெற்றோரே குடும்பத்துகான மணக் கொடுப்பனவுகள்(சீதணம்) வழங்குவிப்பதனால் பெண்பிள்ளையின் பெற்றோர் இவ் வீட்டில் இருப்பது இங்குள்ள வழக்கமாகும்.

குடியேற்றக் கிராமங்களில் (படுவான் கரை) பெரும் பான்மை கிழைவளிக் கூட்டுக்குடும்பங்களே அமைந்துள்ளது. இங்கு பெண் வீட்டாரின் பெற்றோர், பிள்ளைகள் என அமைந்து காணப்படும். இதுவே கிளைவழிக் கூட்டுக் குடும்பங்களாகும். (எண்ணிக்கை 8 -11வரை அமையும்)  இங்கு திருமணமான பின் பிரிந்து செல்லும் வழக்கம் உண்டு. இங்கு பிரதான தொழில் விவசாயம் என்பதால் விவசாயத்தை மேற்கொள்ளுவதற்கு பலர் தேவை இதனால் தொழில் அடிப்படையில் கிளைவழிக் கூட்டுக் குடும்பமே அதிகமாக உள்ளது. சமூக அமைப்பில்; ஆரம்ப நிறுவனமாக விளங்கும் குடும்பங்கள் இங்கு பக்திமார்க்கத்திலும், கல்வியிலும் அதிக ஈடுபாடு உடையதாகும். குடும்பங்கள் சீர்பாத குல சமூகத்தவரிடையே பண்பாட்டு அம்சங்களை மீள் உருவாக்கம் செய்கின்றது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் சீர்பாத குலம் பற்றிய மரபுவளிக் கதைகளாகும். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு சீர்பாத குலம் பற்றிய எது வித ஆய்வுகளே அல்லது நூல்களோ இல்லை இந்த வகையில் சீர்பாத குலம் பற்றிய வரலாற்றுக் கதைகள் குடும்ப வழி வாய்மொழி ரீதியாக பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதனில் உறுப்பினர் ஒருவர் என்ன குடி? அவருக்கான மைத்துனன் குடி என்ன? அவர்களுக்கான உரிமைகள் என்ன? என்பன போன்ற விடயங்களும் இவற்றோடு சேர்ந்த பிற விடயங்களும் தலைமுறையாக தலை முறையாக அறியக் கூடியதாக இருந்திருக்கின்றது. இது இன்றைய நிலையிலும்  இவற்றுக்கு குடும்பங்கள் மிகவும் பங்காற்றுகின்றன. இந்நிலை இவர்களுக்குள்ளே தங்கள் அனைவரும் ஒரு சாதியினைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வினை வளர்த்து ஒற்றுமையைநிலை நாட்டுகின்றது. 

பொருளாதாரம்
பொருள் உள்ள வாழ்க்கையே மனித வாழ்க்கையாகும். பொருள் மனித வாழ்க்கைக்கு ஆதாரமாகும், இதனாற் பொருளாதாரம் என்ற சொல் தோற்றம் பெற்றது. மக்கள் வாழ்விற்காக திட்மிட்ட முறையில் புறச் சூழலோடும் சமூகச் சூழல்களோடும் இடைவினை புரியும் செயல்களே பொருளாதார செயல்கள் என பொருளியல் சார் மானிடவியலாளர்கள் கூறுவர். இப் பொருளாதார நிலையை சீர்பாதக் குல மக்களின் வாழ்வினை அடிப்படையாக வைத்து நோக்குவோம்.
 
ஒரு சமூகத்தின் தோற்றமும். எழுச்சியும் அச்சமூகத்தின் சமூகவரலாற்றுக் காரணிகளோடும் நில வளங்களைக் கொண்டும் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த வகையில் சீர்பாத குலத்தவரின் தொழில்களும் சூழலின் பாதிப்புக்கு ஏற்றவகையிலேயே அமைந்துள்ளது. அந்தவகையில் சீர்பாத குலத்தவர் அரசர், அந்தணர், வேளாளர், வணிகர் (செட்டியர்) போன்ற பல சாதிகளையும் கொண்டமைந்த ஒரு கூடடுச் சமூகம் இவர்களின் தொழில்கள் இந்தியாவில் வேறுபட்டுக்காணப்பட்டாலும் இலங்கையில் வீரமுனையில் வந்து ஓர் குலமாகியபின் இவர்களது தொழில் சூழலின் பாதிப்புக்கு ஏற்ற வகையிலே அமைந்தது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பிரதான தொழில் விவசாயம் என்பதனாலும் சீர்பாதகுலத்தவர்களின் பிரதான தொழில் விவசாயமாகக் காணப்படுகின்றது. அத்தோடு விலங்கு வேளாண்மை, வர்த்தகம், சிறுகைத்தொழில், மேசன், தச்சு என்பனவும் ஆங்கிலேயரின் வருகையின் பின் அரசாங்கத் தொழில்களும், அதன் பின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களும், நவீனத்துவ காலமான இன்றைய காலங்களில் அரச சார்பற்ற உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிலும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்று பொருள் ஈட்டுவதை அவதானிக்கலாம்.

பொருளாதார அமைப்பில் முக்கியம் பெறுவது விவசாயம் என்பதால் சீர்பாத குலமக்கள் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர். இதனால் சீர்பாத குலமக்களின் பிரதான தொழில் விவசாயமாகவுள்ளது. மூன்று வகையில் சீர்பாத குலமக்களின் விவசாய நடவடிக்கை காணப்படுகின்றது. அதனில் சொந்தமாக பூமிவைத்திருப்பவர், கோயிற் காணிகளையும், பிறர்காணிகளையும் குத்தகைக்கு எடுத்து செய்தல், கூலிக்கு நிற்றல் என்ற வகையில் விவசாயம் மேற்கொள்ளுகின்றனர். இங்கு அடம்பனார் (காணி முகாமையாளர்), போடி, வட்டவிதானை, செய்கைக்காரர், கூலிக்காரர் என்ற பெயர்கள் விவசாயத் தொழிலோடு தொடர்புடைய பெயர்களாகவுள்ளன. சீர்பாத குலத்தவர் மாரிப்போகத்தினை மழைக்காலத்திலும்,சிறு போகத்தினை குளங்கள், ஆறுகளை நம்பி மேற்கொள்ளப்படுகின்றன. சிறு போகத்தினை விட பெரும் போகமே அதிகமாகச் செய்கை பண்ணப்படுகின்றது.

பேச்சுவழக்கு
ஒரு சமூகத்தின் அம்சங்களை உணர்த்துவதில் மொழி பிரதான இடத்தினை வகிக்கின்றது எந்த மொழியினை எந்த மக்கள் பேசிகின்றார்களோ அதனூடாகவே அவர்களின் பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொள்ள முடியும். சீர்பாத குல சமூகத்தினரின் மொழியினை நோக்குகையில் இது மட்டக்களப்பு தமிழாகவே உள்ளது இச்சமூக பேச்சு சொற்கள் சில மக்களினுடைய மண்ணேடும், வாழ்க்கையோடும் தொர்புடையவையும் உயிரோட்டமானவையாகும். இதனை பின்வருமாறு பிரித்து அறியலாம்.

இடங்கள் தொடர்பான பேச்சுவழக்கு
சேனக்குடிப்பு சேனைக்குடியிருப்பு
நற்புட்டிமுனை - நற்பிட்டிமுனை
வீரமுன - வீரமுனை
சொறிக்கல்முன சொறிக்கல்முனை
மணச்சேன - மணல்சேனை
மட்டக்கிளப்பு - மட்டக்களப்பு
கொறமன்வெளி- குருமண்வெளி
மூண்டடப்புவட்ட- மூன்றடைப்பு வட்டை
நாகமோட்டுத்தெடல்- நாகமேட்டுத் தெடல்
மையத்துப்புட்டி- மையத்துப்பிட்டி
சவுக்கால - சவுக்காலை
சேனக்காடு - சேனைக்காடு
சேனவட்ட - சேனைவட்டை
தென்னங்கால - தென்னங்காலை (தோப்பு)
விலங்கினங்கள் தொடர்பான பேச்சு வழக்குச் சொற்கள்
மொயல் - முயல்
கொரங்கு - குரங்கு
கறடி - கரடி
ஆன - யானை
மோதல் - முதலை
பேச்சு வழக்கில் பயன்படும் பல தொடர்கள்
வெட்டி வெளியாக்குதல்
மல்லுக்கட்டி
கண்ணைமூக்கைப்பார்த்து
வாரிச்சுருட்டி எழும்பி
ஊரடி கம்படி
துடிச்சிப்பதச்சி
ஏறக்கட்டிப் போய்க் கெடக்கு
திறாவிக் கிறாவி
வெச வெசயா
எடுத்துப்புடிச்சி
பொலு பொலண்டு
தல தெறிக்க
கக்கூசிக்கு கிக்கூசிக்கு
டக்கெண்டு
அய்மிச்சம்
ஏத்தாப் போல
டக்குப் புக்கெண்டு
படிபுடியெண்டு

தொழிலோடு தொடர்புடைய பெயர்கள்
மோனக்காறன் - வேளாண்மை வெட்டும் குழுத்தலைவன்
தத்தி - வேளாண்மை வெட்டுக்குழு
தட்டான் - பொற்கொல்லன்
நொத்தாஸ் - நொத்தாரிஸ்
கதையை ஆரம்பிக்கும் போழுது பயன் படும் பேச்சுவழககுச் சொற்கள்
ஒரு காட்டுல
ஒரு காலத்துல
அந்தக்காலத்துல
இப்பிடி இருந்து வாறகாலத்துல
இப்படி ஒருநாள்
அதால
எங்கட 

பொதுவாக அறிந்த வகையில் சீர்பாத குலம் போன்று எந்தச் சமூகத்திலும் ஒரு சமூகம் இருந்திருக்க முடியாது. இச்சமூகம் அரசர், அந்தனர், வனிகர், வேளாளர் என வேறுபட்ட அந்தஸ்த்தையும் தொழில்களையும் கொண்டு பல வகுப்பினரை இணைந்த கூட்டுச் சமூகமாகும். இதனால் தான் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை “சீர்பாதகுல வரலாறு” என்னும் நூலிற்கு தான் வழங்கிய மதிப்புரையில் சீர்பாதகுலம் சில நல்ல குணங்களையுடைய ஒரு கூட்டுச்சமூகம் என குறிப்பிட்டுள்ளார். பல சாதியியனர் சேர்ந்து ஒரு குலமாகியமை சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியதால் இது ஒரு ஒற்றுமையின் சின்னம் எனலாம். 
  
தமிழர் பண்பாடு விருந்தோம்பலில் சிறந்தது இவ்விருந்தோம்பலுக்கு உரியயவர் சீர்பாதகுலத்தினர் என்று கூறினால் அது மிகையாகாது.; சீர்பாத குலத்தவர்கள் வாழும் இடத்திற்குச் சென்றால் விருந்தோம்பாமல் வர முடியாது என வேறு சமூகத்தினர் கூறியிருக்கின்;றார்கள். இதனால்தான் சீர்பாத குலத்தவர்கள் கருணபரம்பரை ஒத்தவர்கள் எனக் குறிப்படுகின்றது.

எது எவ்வாறெனினும் சீபாத சமுகத்தார் சோழ இளவரவசி சீர்பாததேவியுடன் வந்த அரச பரம்பரையினர் என்ற பெருமையுடன் பல நற்பண்பகளையும் நல்லதொரு சமுதாய அமைப்பினையும் உள்ளடக்கியவர்களாக கிழக்கிலங்கையில் அழியாச் சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

-முற்றும் -

ஊசாத்துணை நூல்கள்

நூல்கள்
 1. பக்தவத்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல், 1990, புதுவைமொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
 2. அருள்செல்வநாயகம். சீர்பாதகுல வரலாறு 1982- திருவருள்வெளியீடு குருமண்வெளி
 3. F.X. நடராசா, மட்டக்களப்பு மான்மியம், 1962,
 4. சா.தில்லைநாதன், மட்டக்களப்பு இந்து சமய கலாசாரம், 2006, மணிமேகலைப்பிரசுரம், சென்னை.
 5. அண்ணல் அம்பேத்கார். இந்தியாவில் சாதிகள் 1987, சமூகநீதி பதிப்பகம், திருப்பூர்
 6. F.X. நடராசா,(தொகுப்பு ) மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும், 1980, இந்து வாலிபர் வெளியீடு மட்டக்களப்பு.
 7. வெல்லவூர்கோபால். மட்டக்களப்பு வரலாறு ஓர் அறிமுகம்- 2006 manuvedh மட்டக்களப்பு. 
 8. பேராசிரியர் மௌனகுரு, மட்டக்களப்பு மரபுவழிநாடகங்கள் 1998, விபுலம் வெளியீடு மட்டக்களப்பு.
 9. ராகுல் சாங்கித்தியன், மனித சமூதாயம், 2003
 10. ராகுல் சாங்கித்தியன், மனித சமூதாயம், 200310. சி.மௌனகுரு, மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப்பண்பாடு, 2003, 2ம் உலக இந்துமாநாடு-மட்டக்களப்பு பிரதேசக்கிளை.
 11. பக்தவத்சலபாரதி, தமிழர் மானிடவியல், 2002 புதுவைமொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.

சஞ்சிகைகள்
 1. குருமண்வெளி சித்திவிநாயகர் ஆலயநிருவாக சபை- சித்திவிநாயகர்;     ஆலய கும்பாபிசேக சிறப்பு மலர் 2004, வனசிங்க அச்சகம்.
 2. ம.தெ.எ.பற்று பிரதேச சபை- எழுவான்,2006,துறைநீலாவணைமுன்னேற்றப்படுத்தல் அமையம்- முதலாம் ஆண்டு நிறைவு விழா,2004 

பத்திரிகைகள்
 1. தினக்குரல் 15.06.1990
 2. வீரகேசரி 24.12.1988  
 3. மித்திரன் வாரமலர் 28.07.1991 
 4. தினக்குரல் 27.07.2003