சீர்பாதர் வாழ்கின்ற இடங்கள்

சீர்பாத குலம் கிழக்கில் பெருகி வாழ்ந்தமைக்கு காரணமாக அமைந்த இடம் என்ற பெருமையுடைய வீரமுனை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் அமைந்து காணப்படுகின்றது. இது மட்டக்களப்பு வாவியின் தெற்கு அந்தத்தில் இருப்பதாகும். இது 4 பிரிவுகளைக் கொண்டது இங்கு 700ற்கு மேற்பட்ட குடும்பங்களையும். 3000க்கு மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. சீர்பாதகுலத்தவர் வாழும் இடங்களிலே அதிகளவு நெற்காணிகளைக் கொண்டுள்ள இவ்விடம் விவசாயத்தில் சிறப்புற்று விளங்குகின்றது. இவ்வூரில் சீர்பாததேவியினால் சிந்தாத்திரப்பிள்ளையார் ஆலயம் கட்டப்பட்டு அதற்கு கிண்ணறையவெளி, தரவை முன்மாரி, மல்வத்தை வெளி, கறங்கா வட்டை போன்ற நெற்காணிகள் வழங்கப்பட்டது.

வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லம்

வீரமுனையில் சிந்துயாத்திரைப் பிள்ளையார் கோயில், கண்ணகியம்மன் ஆலயம், வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயம், மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் என்பன அழகுற விளங்குகின்றன. மேலும் சீர்பாததேவியின் பெயரில் சிறுவர் இல்லமொன்று அமைக்கப்பட்டு அதில் பொருளாதார பின்னடைவு மற்றும் பெற்றோர் இழத்தல் போன்ற காரணங்களினால் கல்வி கற்க முடியாமல் இருக்கின்ற சிறுவர்கள் வர்க்க பேதமின்றி இணைக்கப்பட்டு அவர்கள் கல்வி கற்பதற்கான சகல வசதிகளும் வழங்கப்படுகின்றன. அத்தோடு அம்பாரை மாவட்டத்திலே இருக்கின்ற சிறுவர் இல்லங்களில் சிப்பும் முன்னேற்றமும் கொண்ட இடமாக இது விளங்குவதோடு இவ்வில்லத்தினை சேர்ந்த சிறுவர்கள் ஏனைய சிறுவர்களுக்கு முன்னோடியாகவும் விளங்குகின்றனர். இங்கு சீர்பாததேவிக்கு சிலையொன்றும் வைக்கப்பட்டுள்ளது. வீரமுனையில் காலதேவன், காங்கேயன், முழவன், பொட்டப்பழச்சி. சிந்தன், பாட்டுவாழி, வெள்ளாகி, நரையாகி, படையன், பரதேசி என பத்து குடிகள் உள்ளன.

வீரமுனையில் 1990இல் ஏற்பட்ட இனக்கலவரம் தமிழர் வரலாற்றில் மிக முக்கியமானது. சம்மாந்துறை வீரமுனை ஆகிய பிரதேசங்களில் இனக்கலவரம் ஆரம்பம் தொட்டு நடைபெறுகின்றது. சம்மாந்துறையில் இருந்து வீரமுனை மக்களை அகற்றினால் அதனைத் தாயகமாகக் கொண்ட மல்வத்தை, மல்லிகைத்தீவுமக்களும் அங்கு வாழமாட்டார்கள் இதனால் முஸ்லிம் பிரதேசங்களை விரிவு படுத்துவது இலகுவானதாக இருக்கும் என்ற இலக்காகும். முன்பு வீரமுனை 7 பிரிவுகளைக் கொண்டு இருந்தது இதில் 3 பிரிவு முஸ்லிங்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது ஏனைய 4பிரிவுளும் சீர்பாத குலமக்களை தனித்துவமாகக் கொண்டது. இப்போது 3 பிரிவுகளும் வீரமுனையில் இருந்து விடுபட்டு உடங்கா கிராம உத்தியோகத்தர் பிரிவாக சம்மாந்துறையில் இணைக்கப்பட்டது மட்டுமன்றி சீர்பாத குலமக்கள் வாழும் பிரிவிற்குள்ளே 80ற்கு மேற்பட்ட குடும்பங்கள் ஊடுருவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீர்பாத மக்களின் தாயகமாக விளங்குகின்ற வீரமுனைக் கிராமத்திலே வாழ்கின் தமிழ் மக்களை அடியோடு அழித்து அதனூடாக சீர்பாதரின் பாரம்பரியத்தினை இல்லாதொழிக்கின்ற செயற்பாடு 1954, 1990ஆகிய ஆண்டு காலப்பகதிகளில் இடம் பெற்றன. இந்தவகையில் 1954ம் ஆண்டு இடம் பெற்ற சிறிய வாய்த்தகராறினை தமக்கு சாதகமாக பயன்படுத்திய சம்மாந்தறை முஸ்லிங்களில் சிலர் அதனை பாரிய பிரச்சினையாக்கி அதனூடாக வீரமுனையிலே பல உயிர்களை கொண்றதுடன் வீரமுனை மக்களின் சொத்துக்களையும் சூறையாடினர். இதில் மாணிக்கன் போன்ற வீரர்களின் செயற்பாட்டினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. தமது குல மக்களை பாதுகாத்து அதற்காகவே தன்னுயிரையம் அர்ப்பணித்த மாணிக்கன் போன்ற சீர்பாதகுல வீரர்களின் செயற்பாடுகள் போற்றுதற்குரியது.

இதே போன்று 1990ம் ஆண்டு காலப்பகதியில் இடம் பெற்ற இனப்பிரச்சினையின் போதும் மீண்டும் ஒரு முறை வீரமுனையில் பாரிய அழிவை எற்படுத்தி அதன் மூலம் வீPரமுனைக் கிராமத்தினை அடியோடு அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 1990.08.12ம் திகதி காலை 9.00 மணியளவில் சீர்பாத மக்களின் சிகரமாக விளங்குகின்ற ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களுடன் நுழைந்து ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது தம் கொலை வேட்டையினை அரங்கேற்றினர். இதன் போது சிறுவர்கள், பெண்கள், இiளைஞர்கள், முதியோர்கள் என 90க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர். 

எனினும் எத்துணை இன்னல்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு தம் பாரம்பரியத்தை பேணுமுகமாக இன்றுவரை வீரமுனை சீர்பாத குல மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தைரியமும், மன உறுதியும் பூமி உள்ள காலம் வரை அவர்களை வீரமுனையிலே வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. 

அடுத்தபடியாக மல்வத்தை, வீரச்சோலை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி போன்ற கிராமங்களும் சீர்பாத மக்கள் வாழ்கின்ற முக்கியம் வாய்ந்த இடங்களாகும். இவ்விடங்கள் வீரமுனை கிராமத்தோடு மிகமிக நெருங்கிய தொடர்புகளை கொண்டவை. இவ்விடங்களை வீரமுனை மக்கள் வெளியிடங்களாக ஒரு போதும் நினைப்பதில்லை, மாறாக இவற்றை வீரமுனையின் பகுதிகளாகவே கணிப்பிடுகின்றனர். மேலும் இக்கிராமங்களில் வாழ்பவர்கள் வீரமுனை மக்களின் மிக நெருக்கமான உறவினர்களாவர். எனவே இவ்விடங்கள் பற்றி அதிகமாக குறிப்பிட வேண்டியதில்லை. இக்கிராமங்களில் வாழ்கின்றவர்களும் சீர்பாதர்களின் பண்பாடுகளையும் கலாசாரங்களையும் பேணி பாதுகாப்பவர்களாகவும் சீர்பாத குலத்திலும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்களாகவே உள்ளனர். அத்தோடு 1990ம் ஆண்டு வீரமுனையில் இடம் பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் இக்கிராமங்களை சேர்ந்தவார்;களே என்பது குறிப்பிடத்தக்கது.  

மட்டக்களப்பின் வடக்கே இறுதி எல்லைக் பிரதேசமாகக் காணப்படுவது துறைநீலாவணைக் கிராமமாகும். இது கிழக்குப் பகுதியில் குளங்களினாலும், மேற்குப் பகுதியில் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பெற்ற தீவாக அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு பட்டிருப்பு தேர்தல் தொகுதியில்;, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. இது வடக்கு, வடக்கு1, தெற்க்கு1, தெற்கு2 என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் முறையே 5ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம்; வட்டாரங்கள் என அழைப்பது இவ்வூர்மக்களது மரபாகும். இவ்வூரின் சனத்தொகை 2005ம் ஆண்டில்4563 ஆகும். இங்குள்ள மொத்தக் குடும்பங்கள் 1222 ஆகும். பல விவசாய நிலங்களைக் கொண்ட இக்கிராமம் பிரதான தொழிலாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதன் வரலாறு சீர்பாத குலத்தோடு தொடர்புடையது.

சோழ நாட்டில் இருந்து சீர்பாத தேவிக்கு துணையாக வந்தவர்கள் இறைவனது அருளால் வீரமுனை வந்து சீர்பாத குலமாகி வீரமுனையில் வாழ்ந்தமை யாவரும் அறிந்ததே. வீரமுனையில் வாழ்ந்த சீர்பாத குலத்தினர் காலத்தின் ஓட்டத்தினால் பெருகி வந்தனர். மக்களது பெருக்கத்துக்கு ஏற்ப உழுது வாழும் தொழில் வளம் வீரமுனையில் பெருகவில்லை. ஆதலினால் வீரமுனையில் வாழ்ந்தவர்களது கவனம். உழுது பயிரிடுவதற்கு ஏற்ற புதிய இடங்களை நாடுவதில் சென்றது. அதன் பயனாக மட்டக்களப்பு வாவியை அண்டிய பல இடங்கள் அவர்களது கவனத்தை கவர்ந்திழுத்தன.

முதலில் நீலன் அணைப்பகுதி அவர்களது நோக்கிற்கு உகந்த இடமாக தோன்றியது. ஆகவே நீலன் அணைப்பகுதிக்குச் சென்று உழுதொழில் செய்வதற்குரிய ஆயத்தங்களை ஏற்படுத்தினர். காடுகளை அளித்தும், காணிகளை செப்பனிடுவதும் பயிர்களை பாதுகாப்பதும் முதலில் சிரமமாகவே இருந்தது. ஆதலினால் நீலன் அணைப்பகுதியில் நிரந்தரமாய் குடியேறிவாழலாயினர். வளம் ததும்பிய மேற்குப்பகுதியும் அவர்களது கவனத்தை ஈர்த்தமையினால் துறையமைத்து போக்குவரத்து செய்தார்கள். அதன் பயனாக நீலன் அணையெனும் பெயர் துறைநீலன் அணையென வழங்குவதாயிற்று. காலவரையில் துறைநீலாவணையென அழைக்கப்படலாயிற்று. குடியேறிய மக்கள் சூழவுள்ள பள்ள நிலங்களை விவசாய நிலங்களாக செப்பனிட்டார்கள். மேற்குக் கரையிலுள்ள மேட்டு; வயல் வெளிகளில் மந்தை வளர்த்தார்கள். மேட்டு நிலங்களில் இல்லங்கள் அமைத்து வாழத் தொடங்கினர். 

மேலும் இக்கிராமம் மண்டூர் கோயில் தோற்றத்தோடு தொடர்புடையது. அதாவது சீர்பாததேவி வழிபட்டு வந்த வேலினை சிந்தன் அங்கு சீர்பாதகுலத்தவரிடையயே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எடுத்துச் சென்று தி;ல்லை மரத்தின் மீது பதித்துவைத்தான். அவ்வேலே மண்டூர் கந்த சுவாமிகோயிலில் வழிபாட்டுக்குரிய வேலாக விளங்குகின்றது. அவ்வேலினைக் கொண்டுவந்த சிந்தன் துறைநீலாவணையிலேயே வாழ்ந்தான் இதனால் இங்கு சிந்தாத்திரன் குடியானவர்கள் அதிகளவாக வாழ்கின்றனர். 

சிந்தாத்திரன், பழச்சிகுடி, காலதேவன்குடி, படையாண்ட குடி, கங்கேயன்குடி, பரதேசிகுடி, வெள்ளாகிகுடி, நரையாகி குடி, ஞானி குடி, பாட்டுவாழி குடி, முடவன் குடி என 11 குடிகளை துறைநீலாவணைச் செப்போடு கூறுகின்றது. துiநீலாவணைக் கிராமத்திலே சிந்தாத்திரன், பாட்டுவாழி, முடவன் குடியினரே அதிக முக்கியத்துவத்தினை உடையவர்களாகக் காணப்படுகின்றனர், இவர்களே கண்ணகியம்மன் ஆலய நிருவாகிகளாகவும் உள்ளனர். 

சீர்பாத குலமக்கள் செறிந்து வாழும் ஊர்களில் குருமண் வெளியும் ஒன்றாகும். இவ்வூர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தென் எருவில்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது சீர்பாத குலத்தவர் குடியேறிய எல்லா இடங்களிலும் பார்க்க நீர்வளமும், மண்வளமும் பொருந்திய இடம் இது தான். இவ்வூர் மண்ணை அடிப்படையாகக் கொண்டு குருமண் என்று பெயர் சூட்டினர். காலக்கிரமத்தில் குருமண் வெளியென மருவிற்று. இவ்வூர் குருமன்வெளி கிழக்கு, மேற்கு, குருமன்வெளி12 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்த சனத்தொகை 3652 ஆகவும் மொத்த குடும்பங்கள் 960 ஆகவும் உள்ளன. இங்கு பிரதான தொழில் விவசாயமாகும். இவ்வூரின் வரலாறு சீர்பாதகுலத்தோடு தொடர்புடையது. 

சீர்பாதகுல மக்களில் பலர் மட்டக்களப்பு வடக்கு நோக்கிச் சென்று குறுமன்வெளியில் குடியேறினார்கள். இங்கு குருமண் வெளியைச் சுற்றிவர பெரிய 4 குளங்களும், குளத்து நீர் பாயத்தக்கதாக வயல்வெளிகள் வாவிக்கரைவரையும். சுற்றிவரக் குளங்கள் இருந்தமையினால் இங்கு விவசாயம் செய்வது இலகுவாக இருந்தது. 

 ஐயர் மார் குருமண்வெளியில் இருந்ததினால் இங்கு இந்தியாவிலிருந்து வந்த ஐயர்மார் திருமணம் செய்வதற்கு வாய்ப்பாக இருந்தது. குருமண் வெளிக்கு மேற்குப்பக்கத்தே வாவிக்கு இடைப்பட்ட விவசாயக் காணிகளில் சில பங்குகள் இச்சமூகத்திலுள் ஐயர்கள் பெயர்களால் அழைக்கப்படுவது நம் கவனத்தினை ஈர்ப்பதாய் உள்ளது மேலும் நீண்டகாலமாக இக்கிராமத்தில் ஐயர் பரம்பரை வாழ்ந்து வருவதனையும் இதற்கு முன் ஐயர் பரம்பரையின் ஒரு பிரிவினர் விபூதி தயாரித்து மட்டக்களப்பு பிரதேசம் எங்கும் விநியோகித்து வந்தமையும் இவர்கள் “திருநீற்று ஐயர்கள்” என்று இவர்களை அழைக்கப்பட்டமையும் அங்குள்ள பெரியோர்கள் நினைவில் உள்ளதனை அவதாணிக்க முடிகின்றது.

குருமன்வெளியின் மத்தியில் சித்திவிநாயகர் ஆலயமும், மரியம்மன் ஆலயமும் இணைந்து பொன்னொளி பரப்புகின்றன. இது தவிர நாகதம்பிரான், ஸ்ரீமாவிஸ்னு ஆலயமும், பத்திகாளியம்மன் ஆலயமும் புகழ்மிக்கவை இவ்வூரில் தொடுகை வயல்கள், விடுவயல்கள் குருமண்வெளி கரைச்சை வெளி நெற்காணிகள் என்பன உள்ளன இவை அவ்வூரில் சித்திவிநாயகர் ஆலயத்திற்கே உரித்தானவையாகும் இங்கு பாட்டுவாழி, காங்கேயன், காலதேவன், பழையன், முழவன், சிந்தன்,  பொட்டப்பறைச்சி, வெள்ளாகி, நரையாகி குடிகள் என்பனவும் இவை தவிர்ந்த பரதேசி, ஞானி குடிகளும் காணப்படுகின்றது. இவ்வாறாக குருறுமண்வெளியில் எட்டுக் குடிகள் உள்ளன. இவ் எட்டுக் குடிகளுக்குமே சித்திவிநாயகர் ஆலயத்திற்கு நிருவாகத்தினராக இருக்கும் உரிமையடையவர்களாக உள்ளனர். இங்கு நிருவாக முறைமை 8க் குடிக்கும் குடித்தலைவர் தெரிவு செய்யப்படும் இவரை அடம்பன் என்றும் கூறுவதுண்டு இங்கு எடடுக் குடித் தலைவர்களும் ஏகோபித்த சம்மதப்படியே தலைவர் தெரிவு செய்யப்படுகின்றனர் இவரை வண்ணக்கர் என்றும் அழைப்பது மரபாகும். இங்குள்ள நிருவாகம் 9 பேர் சேர்ந்தது பொருளாளர், செயளாளர் தெரிவுசெய்யப்படுவர்.

எட்டுக் குடிகளுக்கும் விசேட பூசை பகிர்ந்நதளிக்கப்பட்டுள்ளது அந்தப் பூசைகளை அப்பூசைக்குரிய குடித்தலைவரும் குடிமக்களும் சேர்ந்து சிறப்பாக செய்து முடிப்பர். சிறப்பான பூசைக்கு வட்டா வைக்கும் முறை சிறப்பானது இது தவிர்ந்த கார்த்திகை விளக்கீட்டுப் பூசை காங்கேயன் குடிமாத்திரம் சுவாமி ஊர்வீதி வலம் வருவதுடன்  வெளிவீதியும் வலம் வருவார்கள் இவ்வாறு இவ்வூரில் ஆலயத்தினுடாக மரபுகள் பின்பற்றப்படுவதனைக் காணலாம.; அவ்வூரில் சீர்பாததேவி சிறுவர் பாடசாலை ஒன்று கட்டியதோடு அங்கு அருள் செல்வநாயகததின்; நோக்கத்தினை நிறைவு செய்யும்முகமாக சீர்பாததேவிக்கு சிலை வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் அறிஞர் செல்வநாயகத்தினை பெற்றெடுத்த இவ்வூர் மண்டூர் கணக்கப்பிள்ளைகளில் ஒருவராக இருப்பதுடன் மண்டூர் ஆலயத்தின் 11ம் நாள் திருவிழாவின் போது சீர்பாத குலத்தவரான ஞானிக்குடியினர் புஸ்ப விமான புண்ணியதான சங்கர்ப்பம் செய்யும் உரிமையுடையவர்களாகவும் உள்ளனர். இதை விட 12ம் திருவிழா, 14ம், 16ம் திருவிழா குருமண்வெளி மக்களால் நடத்தப்படடு வருவது குறிப்பிடத்தக்கது.
 
வீரமுனை, துறைநீலாவணை, குருமண்வெளி போன்ற இடங்களில் சீர்பாதகுலத்தவர் அதிகம் வாழ்வதைப் போன்று சேனைக் குடியிருப்பிலும் வாழ்கின்றனர். இது அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை தமிழ்பிரிவில் அமைந்துள்ளது சேனைக்குடியிருப்பு1, சேனைக்குடியிருப்பு1டீ, சேனைக்குடியிருப்பு2யு என்னும் மூன்று பிரிவுகள் கொண்டமைந்துள்ள இது 3228 மக்கள் தொகை கொண்ட அழகிய கிராமமாகும். இங்கு வடக்கிலும் மேற்கிலும் பல விவசாய நிலங்களைக் கொண்டமைந்துள்ளதால் இவர்கள் விவாசயத் தொழிலை மேற்கொள்கின்றனர். இங்கு சிந்தன், பாட்டுவாழி, முடவன், பொட்டப்பழச்சி, நரையாவி. வெள்ளாகி, பரதேசி காலதேவன், காங்கேயன் குடிகள் உள்ளன.

சீர்பாத குலமக்களில் ஒரு சாரார் தொழில்வளம் நாடி அயல் இடங்களுக்கு சென்றனர் அதில் மட்டக்களப்பு வாவியின் கிழக்கு கரையோரமாக சென்று காடுகளை வெட்டி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். பள்ளநிலங்களையும் திருத்தி வயல் நிலங்களாக்கினர். இவர்களோடு வீரமுனையில் இருந்து வந்தவர்களும் சேர்ந்து சேனைச் செய்கையில் ஈடுபட்டார்கள் அவர்கள் அங்கேயே நிலையாகக் குடியேறினர். இவர்கள் இவ்வாறு குடியேறிய இடம் சேனைக்குடியிருப்பு என அழைக்கப்படலாயிற்று. சேனைக்குடியிருப்பின் ஓர் அந்தம் மட்டக்களப்பு வாவியின் துறையாக விளங்கியது.  இத்துறை கிட்டங்கித் துறையென அழைக்கப்படுகின்றது.

சேனைக்குடியில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் என்பன முக்கியமான ஆலயங்களாகும். இதில் பத்திர காளி ஆலயத்தின் திருவுருவம் தென்மேற்கு திசையிலுள்ள சொறிக்கல் முனையில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்தவகையில் சேனைக்குடியிருப்பில் வாழ்கின்ற சீர்பாதகுலத்தவர்கள் சீர்பாத குலப்பண்பாடுகளையும் சிறப்புக்களையும் பேணிப்பாதுகாப்பவர்களாக விளங்குகின்றனர்.

மேலும் சீர்பாத குலத்தவர்கள் வாழ்கின்ற இடங்களில் நாவிதன்வெளி, 7ம் கிராமம், 15ம் கிராமம், தம்பலவத்தை, 13ம் கிராமம், சென்றல் கேம், 6ம் கிராமம், இறாணைமடு போன்ற மேலும் பல கிராமங்களும் விளங்குகின்றன. இவ்வாறான கிராமங்களில் சீர்பாத குலத்தவர்கள் தங்களின் குலப்பண்புகளோடு ஓற்றுமைமிக்க கூட்டுச் சமூகமாக வாழ்கின்றனர்.