சீர்பாதர் சரித்திரம்

பண்டைய காலத்திலிருந்தே இலங்கை ஆசியாக்கண்டத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த நாடாக விளங்குகின்றது. மன்னராட்சி படையெடுப்புக்கள் என்பனவும் மாறி மாறி நிகழ்ந்தமையினையும் இலங்கை வரலாற்றில் இருந்து காணமுடியும். இராமாயணம் என்கின்ற ஆதிகாவியத்தின் மூலமாக இராவணண் என்கின்ற பழம் பெரும் மன்னன் ஒருவன் இலங்கையினை ஆட்சி செய்தமையும் அவன் ஒரு சிறந்த சிவ பக்தன் என்பதனையும் அறிவதோடு இவன் மூலமாக நாம் இலங்கையில் இந்து மதம் ஆதி காலந் தொட்டே நிலவி வருகின்றமையினையும் அறியலாம். மேலும் இலங்கையில் இந்து மதம் புராதன காலந்தொட்டு இருந்து வருகின்றதென்பதற்கு இலங்கை வரலாறு பற்றி கூறுகின்ற மகாவம்சம் ஆதாரமாக உள்ளது. இலங்கையிலும் சமயச்சின்னங்களை நாணயங்களில் பொறிக்கின்ற இந்திய மரபு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதலாக நிலவி வந்தமைக்கு தற்கால தொல்பொருள் சான்றுகள் ஆதாரமாக அமைகின்றன. இந்நாணயங்களில் இந்து மதத்தை பிரதிபலிக்கின்ற திரிசூலம் வேல் இடபம் மயில் கருடன் சிவலிங்கம் உருத்திராக்கம் முதலிய சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றமை இலங்கையில் இந்து மதத்தின் புராதனத்திற்கு சான்று.

ஆதிகாலத்தில் இலங்கையை ஆண்ட அரசர்கள் சைவசமயத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமைக்கான சான்றினை நோக்குகின்றபோது மகாவம்சத்தின் உரை நூலான “வம்சத்தப்பகாசினி” கூறுகின்ற கருத்தின்படி அநுராத புரத்தினை அமைத்த போது அங்கே “சிவிகசாலா” என்பதனை பண்டுகாபயன் கட்டு வித்தான் எனவும் இது சிவலிங்கத்தை வைத்து வழிபடும் இடம் எனவும் அறிய முடிகின்றது. இத்தகைய புராதன ஆதாரங்கள் மூலமாக நாம் இலங்கை இந்து மதப்பழமை பற்றி அறியலாம்.

பக்தி மற்றும் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வாழ்க்கை முறையினைக் கொண்ட மக்கள் சமூதாயம் இலங்கையில் ஆதி காலந்தொட்டே வாழ்ந்து வந்திருக்கின்றது. இவ்வாறான பண்புகளைக் கொண்ட மக்களின் தேவைகளையும் நலன்களையும் நிறைவேற்றுவதனை இலக்காக கொண்டு அக்கால மன்னர்கள் தங்களின் செங்கோல் ஆட்சியினையும் நிலைநாட்டியிருக்கின்றனர். இவ்வாறான ஆட்சியின் சின்னங்களாக வியக்கத்தக்க வகையிலான வேலைப்பாடுகளைக் கொண்ட ஆலயங்கள் பலவற்றினையும் இம்மன்னர்கள் அமைத்திருக்கின்றனர். இவ்வாலயங்களில் பல இடையிடையே ஏற்பட்ட படையெடுப்புக்கள் அந்நியரின் ஆக்கிரமிப்புக்கள் போன்றவற்றின் விளைவாக அழிந்து போயுள்ளதோடு சில ஆலயங்கள் அம்மன்னர்களின் நினைவுச்சின்னங்களாக இன்னும் சரித்திரப்பிரசித்தியோடு விளங்குகின்றன.

இன்றையை உலகில் எத்தனையோ ஆலயங்கள் புதிதாக தோற்றம் பெற்றபோதும் பழம் பெருமையினையும் வரலாறுகளையும் கொண்ட ஆலயங்களே ஏனைய ஆலயங்களுக்கு முன்னோடியாகவும் வழி காட்டியாகவும் விளங்குகின்றன என்பது உண்மை. அவ்வாறு பழமை வாய்ந்த ஆலயங்களும் அதனோடு தொடர்புபட்ட மக்கள் சமுதாயமும் அவ்வாலயத்தின் பழமைக்கேற்றவாறும் அவர்களின் முன்னோரின் பண்பாடு கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற வகையிலும் தங்கள் வாழ்க்கை முறையினை அமைத்து அவ்வாலயத்தினை அண்டிய பிரதேசங்களில் வாழ்கின்றமையினையும் காணலாம்.