உக்கிரமசிங்கன் ஆட்சி

இன்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை கொடிய காட்டுப்பகுதியாகவே காணப்பட்டது. இதில் மனிதர்கள் என்று சொல்வதற்கு சில வேடர்கள் மாத்திரமே இருந்தனர். இவ்வாறு வனாந்திரமாக காணப்பட்ட இலங்கையில் வங்கதேசத்து சத்திரி மரபில் பிறந்து இலாட தேசத்தை அரசாண்ட சிங்கவாகுவின் குமாரனான விஜயன் தன் கூட்டத்தாரோடு குடியேறி அரசாட்சியினை ஆரம்பித்தான். இந்தவகையில் இவன் இலங்கை அரசாட்சி வரலாற்றில் முக்கிய மன்னனாக விளங்குகின்றான். விஜயன் பல ஆண்டுகள் அரசாண்டு அதன் பின்னர் அவனுடைய பரம்பரையை சேர்ந்த சில மன்னர்கள் ஆட்சிபீடமேறியுள்ளனர். இவர்களில் விஜயனின் சகோதரன் மரபில் தோன்றிய உக்கிரசிங்கன் என்னும் மன்னன் தனித்துவம் வாய்ந்த ஒருவனாக காணப்படுகின்றான். இவன் பெரும் படை கொண்டு வந்து நடாத்திய போராட்டத்தின் விளைவாக சில தலைமுறைகளாக இழந்து கிடந்த அரசாட்சியின் ஒரு பகுதியினை கைப்பற்றி கதிரமலையிலிருந்து அரசாண்டு வந்தான். இவனுடைய காலப்பகுதியாக கி.பி. 785ம் ஆண்டுப்பகுதி குறிப்பிடப்படுகின்றது.


விஜயனுடைய பரம்பரையில் தோன்றியவனாகையால் உக்கிரசிங்கன் வீரம் நிறைந்த மன்னனாகவும் அரசர்க்குரிய இலக்கணங்கள் வாய்க்கப் பொற்றவனாகவும் துணிச்சலோடு செயற்படக்கூடிய தன்மை கொண்டவனாகவும் காணப்பட்டான். வேற்று அரசர்களின் படையெடுப்பு காரணமாக உக்கிரசிங்கனின் படையெடுப்புக்கு முன்னர் நாகநாட்டு மக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர். இவ்வாறான தத்தளிப்புக்கு மத்தியில் உக்கிரசிங்கனின் அரசாட்சியானது நாக நாட்டில் முக்கியம் வாய்ந்ததொரு செங்கோல் ஆட்சியாக காணப்பட்டது.


அக்காலத்தில் மன்னர்களின் ஆட்சியானது பொதுவானதொரு கட்டுக்கோப்பினை கொண்டதாக காணப்பட்டது. இப்பொதுவான கட்டுக்கோப்பினை மீறிய அரசர்களின் ஆட்சியினை மக்கள் ஏற்றுக் கொள்ளாததோடு அவ்வாறான அரசர்களின் ஆட்சி நீண்டகாலம் நிலைத்திருக்கவும் இல்லை என்பது வரலாற்றில் காணப்படுகின்ற உண்மை.


பொதுவான கட்டுக்கோப்பு என்னுமிடத்து ஒரு மன்னனானவன் மக்களோடு ஒன்றியவனாகவும் மக்களின் குறை நிறைகளில் அக்கறை கொண்டவனாகவும் நீதியின் வழி தன் ஆட்சியினை வழி நடத்துபவனாகவும் சிறந்ததொரு நீதிமானாகவும் வறுமைப்பிடிக்குள் நாட்டினை வாட்டாது தடுப்பவனாகவும் அமைதியான சூழ்நிலையினை தன் செங்கோல் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்துபவனாகவும் அந்நியப்படையெடுப்புக்களை வெற்றியுடன் முறியடிப்பவனாகவும் சிறந்ததொரு படைத்தளபதியாகவும் வீரம் பொருந்தியவனாகவும் கடவளுக்கு அடுத்ததாக வைத்துப்பார்க்கக்கூடிய பண்புகள் கொண்டவனாகவும் நாட்டிலே தன்னாட்சிக்காலத்தில் சிறந்த நிர்மாணப்பணிகளை மேற்கொள்பவனாகவும்; கலை, கல்வி, பண்பாடு ஒழுக்கம் போன்றவற்றில் தனக்கு நிகர் இல்லாதவனாகவும்; சிறந்த பக்திமானாகவும் இருக்கவேண்டும். இவ்வாறான பண்புகள் ஒரு மன்னனிடம் காணப்படவேண்டிய அடிப்படை பண்புகளாகும்.

மேற்படி கட்டுக்கோப்பினை மீறாதவனாகவே உக்கிரசிங்கன் காணப்பட்டான். 8ம் நூற்றாண்டில் சிறந்த ஒரு ஆட்சியினை இலங்கையில் வழங்கிய மன்னன் என்ற பெருமை இன்னும் அழியாமல் கொண்டவனாக உக்கிரசிங்கன் புகழ் விளங்குகின்றது.


கதிரமலை அரியாசனத்தில் வீற்றிருந்த உக்கிரசிங்கன் சிறந்ததொரு பக்திமானாக காணப்பட்டான். இவன் இறைவழிபாடு இறை நம்பிக்கை என்பன வாய்க்கப் பெற்றவனாக காணப்பட்டான். கீரிமலையில் எழுந்தருளியிருக்கும் நகுலேஸ்வரப் பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். முழுமதி தினத்தன்று கதிரமலையிலிருந்து கீரிமலைக்கு வந்து அங்குள்ள புனித நீரூற்றில் நீராடி நகுலேஸ்வரப் பெருமானை வழிபடுவதை இவன் வழக்கமாக கொண்டிருந்தான். உக்கிரசிங்கன் கொண்டிருந்த பக்தி நெறிக்கு இச்சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு.


அக்கால மன்னர்கள் பலங்கொண்டவர்களாகவும் எதிரிப்படைகளை புறமுதுகு காட்டி ஓட வைக்கின்ற வீரர்களாகவும் இருந்தாலும் அவர்கள் காதல் என்கின்ற இன்ப வேதனைக்கு ஆளாகியிருக்கின்றமையினை மன்னர்கள் வரலாற்றிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. 


மன்னர்கள் தங்களின் அரண்மனையில் அந்தப்புரம் எனும் பகுதியினை அமைத்து அங்கு அழகிய மங்கையர்களை வைத்து ஆடல் பாடல் போன்ற இன்ப நிகழ்வுகளினால் மகிழ்ச்சியுற்றனர். இது மன்னர்கள் காதல் வயப்பட்டவர்கள் என்பதற்குச் சான்று. இவ்வாறான காதலின் காரணமாக எழில் மோகன மங்கையொருத்தியின்பால் தன் மனதினைப் பறிகொடுத்த நிலையினை உக்கிரசிங்கனிடமும் காணலாம்.


சோழ தேசாதிபதியாகிய திசையுக்கிர சோழன் மகளாகிய மருதப்புர வல்லி என்கின்ற இளவரசி கொடுமையான குன்ம நோயினால் பாதிக்கப்பட்டு அவளுடைய அழகிய வதனம் குதிரை முகமாக மாறி சோர்ந்து போய் காணப்பட்டது. இவ்வாறான கொடிய வியாதியினால் பாதிக்கப்பட்ட தன் மகளின் நிலைமை திசையுக்கிரசோழனுக்கு மனக்கவலையினை உருவாக்கியது. அரண்மனையில் மயில் போன்று உலா வரவேண்டியவள் தன் அழகுடலால் ஆடவர்களை கவர்ந்திழுக்க வேண்டிய அரச குமாரி; அயல் நாட்டு மன்னர்கள் போட்டியிட்டுக்கொண்டு மணம் முடிக்க வேண்டிய இளமங்கை; இவ்வாறான தொரு நோயினால் பீடிக்கப்பட்டிருப்பது எந்த தந்தைக்குத்ததான் துன்பத்தினை தராது? அரசசபையிலே இருக்கின்ற சிறந்த வைத்தியர்கள் மாத்திரமன்றி ஏனைய நாடுகளைச்சேர்ந்த எத்தனையோ வைத்தியர்கள் வந்தும் அந்த நோயினை தீர்க்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த மருதப்புரவல்லி இந்நோயினை வைத்தியர்கள் எவரும் குணமாக்க முடியார் என்று நினைத்து தீர்த்த யாத்திரை சென்று புனித தீர்த்தங்களில் நீராடிப்பார்த்தாலாவது இந்நோய் குணமடையும் என்ற நம்பிக்கையுடன் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து புறப்பட்டு புனித தீர்த்தங்களில் நீராடி வந்தாள்.


இவ்வாறு நீராடி வரும் காலத்திலே சாந்தலிங்க சுவாமி என்னும் சந்நியாசி கண்டு உன் வியாதியானது வைத்தியர்களால் குணமாக்க முடியாதது, இதற்கு உன்னுடைய தீர்த்த யாத்திரையே பயன் தரத்தக்கது என்று கூறி இலங்கையின் வட முனையிலே கீரிமலையென்னும் ஓர் இடமுண்டு அங்கு இருக்கின்ற புனித தீர்த்தத்தில் நீராடி அங்கு சில காலம் தங்கியிருந்தால் குணமடைவாய் என்று கூறினார்.


கீரிமலை நீரூற்றானது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நீரூற்றாக விளங்கியது. ஈழத்திலும் தமிழகத்திலும் இதன் பெருமை பாராட்டப்பட்டது. இது பல அற்புதங்களும் பெருமைகளும் வாய்க்ப்பெற்றதொரு நீரூற்றாக விளங்கியது. திரோதாயுகத்தில் பரமேஸ்வரனும் பார்வதியும் இமய மலையில் எழுந்தருளினர் அக்காலத்தில் பார்வதி நீராடுவதற்காக இத்தீர்த்தம் உருவானதாக புராணங்கள் கூறுகின்றன. இதில் தேவர்களும் முனிவர்களும் நீராடி புண்ணியம் எய்தியமையால் புண்ணியாபுரம் என்கின்றதொரு பெயரும் இவ்விடத்திற்கு  வழங்கப்படலாயிற்று. நகுல முனிவர் என்பவர் இத்தீர்த்தத்தில் நீராடி நகுலேஸ்வரப் பெருமானை வழிபட்டதால் அவருடைய கீரிமுகம் மாறி மனித சுபாவம் கிடைத்ததாக வரலாறு கூறுகின்றது. இது மாத்திரமன்றி நிடத நாட்டு அரசனான நளமகாராசன் கீரிமலை தீர்த்தத்தில் நீராடி அதன் பயனாக தன்னைப் பிடித்திருந்த கலியினை நீக்கியதாகவும், அருச்சுனன் தீர்த்தயாத்திரை மேற் கொண்ட போது இத்தீர்த்தத்தில் நீராடியதாகவும் கூறப்படுகின்றது. புராண இதிகாச இலக்கிய தகவல்கள் கீரிமலை நிரூற்றினை பெருமைப்படுத்துவனவாக அமைகின்றன.


இவ்வாறான பெருமைகள் வாய்க்கப்பெற்ற கீரிமலை நீரூற்றில் தீர்த்தமாடினால் தன்னைப் பிடித்துள்ள குன்ம நோய் நீங்கும் என்ற எண்ணத்தோடு மருதப்புரவல்லி தன் அரசகுலப் பெண்கள் மற்றும் பட்டாளத்தோடு வட இலங்கை புறப்பட்டு வந்து அங்கே குமாரத்தி பள்ளம் என்னும் இடத்தில் பாளையம் இட்டிருந்தாள். இக்காலப்பகுதியில் நகுல முனிவரை சந்தித்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று அவரிடம் அவருடைய குன்ம நோய் நீங்கிய சமபவத்தினையும் கேட்டு மிக மகிழ்ச்சியுடன் கீரிமலை தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனம் தொடர்ச்சியாக செய்து வந்தாள். இவ்வாறான அவளின் புனித நீராடல் மற்றும் சிவாலய தரிசனத்தின் பயனாக அவளைப்பிடித்திருந்த கொடிய குன்ம நோயும் படிப்படியாக நீங்கி அவளுடைய குதிரை முகம் மாறி அழகு குடிவந்தாற்போல் அவளுடைய உடல் யௌவன எழில் கொண்ட அழகிய மங்கை எனும்படியாக  மருதப்புரவல்லி எனும் இளவரசி தோன்றினாள். இவ்வாறான அழகும் இளமையும் கொண்ட இவளுடைய சொரூபத்தைக்கண்டு ஆச்சரியம் கொள்ளாதோரே இல்லை எனலாம். 


இக்காலப்பகுதியில் உக்கிரசிங்க மகாராசன் மூன்றாம் தடவையாக கதிர மலையிலிருந்து வந்து நகுலேஸ்வரப் பெருமானை தரிசிப்பதற்காக வளவர்கோன் பள்ளத்தில் பாளையம் போட்டிருந்தான். இதன்போது நகுலேஸ்வரப் பெருமானை தரிசிப்பதற்காக ஆலயத்தினுள்ளே சென்றிருந்தான் அதே சமயம் மருதப்புரவல்லியும் இறைவனை தரிசிப்பதற்காக வந்து இறை தியானத்தில் நின்றிருந்தாள் தியான நிலையில் நின்று கொண்டிருந்த அழகுகள் அனைத்தும் ஒன்றாக குடி கொண்டிருக்கின்ற மங்கையான மருதப்புரவல்லி கட்டிளம் காளையாக அங்கு நின்றுகொண்டிருந்த மன்னவனான உக்கிரசிங்கனின் கண்களில் தென்பட்டாள். இறைவனை வழிபடும் நோக்கத்தோடு ஆலயத்திற்கு வந்த மன்னன் வந்த நோக்கத்தினை மறந்து மங்கையின் எழில் வடிவில் மெய்மறந்து போனான். “பக்தி நிலையில்கூட இவ்வளவு அழகாக தோன்றுகின்ற இவளைப் போன்ற ஒரு பெண்ணை நான் இதுவரையில் பார்த்ததில்லையே” என்ற ஆதங்கத்தோடு உக்கிரசிங்கன் காணப்பட்டான். 


ஆலயத்திலே அழகு பொருந்திய மருதப்புரவல்லியினை கண்ட உக்கிரசிங்க மன்னவனுக்கு உள்ளத்திலே மெல்ல மெல்ல காதல் உணர்வு தேன்போல ஊற்றெடுத்தது. அவளைத்தவிர வேறு எவரையும் மணப்பதில்லை எனவும் அவள் இல்லாமல் இவ்வுலகில் உயிர் வாழ முடியாது என்ற எண்ணமும் அவனுடைய மனதில் ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியது. தனது அடுத்த நடவடிக்கை இவளை மணம் புரிவது என்ற நினைப்போடு ஆலயத்திலே கயல் விழிகளை மூடி இறை தியானத்தில் மூழ்கிக் கொண்டிருந்த அவளின் கண்கள் எப்போது திறக்கும் அவள்பார்வை தன்மீது எப்போது படும்; தன்னைப்பார்த்ததும் அவள் மனதில் தன்னைப்பற்றி எவ்வாறான எண்ணம் கொள்வாள்; என்பன போன்ற நினைவலைகள் கொண்ட பதைப்புடன் மன்னவன் மருதப்புரவல்லியை வைத்த கண்வாங்காது பார்த்துக் கொண்டு நின்றான். ஆலயத்திலே அர்ச்சகர் பூசையினை நிறைவு செய்து விட்டு பிரசாதம் வழங்குவதற்காக வந்து கொண்டிருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தையே எதிர்பார்த்து நின்றான் மன்னன். 


பூசை நிறைவடைந்ததும் தனது இறை தியானத்தை முடித்துவிட்டு தன் கயல் விழிகளை திறந்தாள் மருதப்புரவல்லி என்கின்ற அந்த அழகிய இளவரசி. அவள் கண்களை திறந்ததும் அவள் முன்னே தன்னை இமை வெட்டாது பார்த்துக் கொண்டிருக்கும் உக்கிரசிங்க மன்னன் தென்பட்டான். “இவ்வளவு தீவிரமாக தன்மீது பார்வையினை செலுத்துகின்றவன் யார்” என்ற நினைப்புடன் இளவரசியும் உக்கிரசிங்கனை உற்றுநோக்கினாள். மன்னவனும் அவளைத் தொடர்ந்து பார்வைக் கணைகளை தொடுக்க இளவரசி தலையினை மெதுவாக திருப்பிக்கொண்டு பூசகரிடம் பிரசாதத்தினை பெற்றுக்கொண்டு ஆலயத்திலிருந்து திரும்பினாள். இருந்தபோதும் தன்னை இமை வெட்டாது பார்த்துக்கொண்டிருந்த அந்த கட்டிளம் காளையை பற்றிய எண்ணம் அவள் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. அவளின் கணிப்பின்படி அவன் நிச்சயமாக ஒரு தேசத்தை ஆளுகின்ற மன்னன் என்று உறுதி கொண்டாள். இளவயதினையுடைய மருதப்புரவல்லியின் மனதிலும் காதல் உணர்வு ஊற்றெடுக்க ஆரம்பித்தது. மன்னவனின் நினைப்போடு அவள் தன் தங்குமிடத்தை அடைந்தாள்.


ஆலயத்திலே தான் கண்ட அந்த காதல் கன்னியின் நினைப்புடன் சென்ற உக்கிரசிங்க மன்னவன் காதல் நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான். தான் அவளை இக்கணமே மணக்க வேண்டும்; அவள் யார்? அவளுடைய பெற்றோர் யார்? எந்த தேசத்தை சேர்ந்தவள்? என்பன போன்ற வினாக்கள் மன்னவனின் மனதிலே சுழன்று கொண்டிருந்தது. இவ்வாறான சுழற்சியின் வேகத்தால் தன் அமைச்சரை விசாரித்து வரும்படி வேண்டினான். மன்னவன் கட்டளைக்கிணங்க அமைச்சரும் சென்று இளமையான மேனியும் அழகிய வதனமும் கொண்;ட அம்மங்கை தொடர்பான சகல விடயங்களையும் தெளிவாக அறிந்து வந்தார். தன்மனக்கவலையின் ஒரு பகுதியினை போக்குகின்ற தகவல்களை அறிந்து வந்த அமைச்சரைக் கண்ட உக்கிரசிங்க மன்னன் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்று வார்த்தைத்தடுமாற்றத்துடன் தகவல்களை கூறும்படி வினவினான். அமைச்சரும் தான் அறிந்து வந்த செய்திகள் அனைத்தையும் மன்னனிடம் தெளிவாக கூறினார். சோழ தேசாதிபதியாகிய திசையுக்கிரசோழனின் மகள்; என்பதிலிருந்து அவள் குன்ம நோய் நீங்கியது வரையிலான அனைத்து செய்திகளையும் அமைச்சர் ஒழுங்குமுறையாக விளக்கினார். எனினும் அவள் குன்ம நோயினால் பீடிக்கப்பட்டவள் என்ற செய்தியினை மாத்திரம் அவன் நம்பவில்லை. இருந்த போதிலும் குன்ம நோயினை தீர்பதற்காகவே அவள் கீரிமலை வந்தாள் என்ற விடயத்தினை அமைச்சர் மன்னவனுக்கு விளக்கினார். இதனைக் கேட்டு வியந்த மன்னன் அவள் இருக்கும் இடத்தினை அமைச்சரிடம் வினவினான்.


“குமாரத்திபள்ளம் என்ற இடத்தில்தான் அவர்கள் கூடாரம் அடித்து தங்கியிருக்கின்றார்கள்” என்ற செய்தியினைக் கேட்ட மன்னவன் இவள் நினைப்பினால் நாழிகைகளை வருடமாக கழிக்கிறேன். அவள் அண்மையில்தான் இருக்கின்றாளா? என்ற வியப்பு; மகிழ்ச்சி போன்ற உணர்வுகளுடன் எப்படியாவது அவளை அணுகி தன் காதல் விருப்புகள் அனைத்தையும் அவளிடம் கூறிவிட வேண்டும் என துடித்தான். “உடனடியாகவே நான் அவளை சந்திக்கப்போகின்றேன்” என அமைச்சரிடம் கூற இதனைக் கேட்ட அமைச்சர் மன்னனிடம் “அவள் அங்கே பலத்த பாதுகாப்புகளுடன் இருக்கின்றாள். தாங்கள் தனியே சென்று அவளை நெருங்க முடியாது” என்று கூறினார். அதனைக்கேட்ட மன்னன் “வாழ்ந்தாள் அவளுடன்தான் இல்லையேல் இவ்வாழ்வு எனக்கு தேவையில்லை என்ற உறுதியுடன் இருக்கும் எனக்கு எந்த பாதுகாப்பும் பெரியதொரு விடயமல்ல” எனக்கூறினான். மன்னவனின் வேகத்தை தடுக்க முடியாத அமைச்சரும் மேலதிகமாக எதுவும் கூறமுடியாதவராக நின்றார். நள்ளிரவு வேளை மருதப்புரவல்லியின் கூடாரத்தை அணுகினான் மன்னன் உக்கிரசிங்கன். நள்ளிரவு வேளையாதலால் இளவரசி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பபாள் என்றெண்ணி சகல பாதுகாப்புகளையும் தாண்டி அரசியாரின் கூடாரத்தை நெருங்கினான் மன்னன் உக்கிரசிங்கன்.


நகுலேஸ்வரர் சந்நிதியிலே கட்டிளம் காளையென தோற்றமளித்த உக்கிரசிங்கனைக் கண்ட மருதப்புரவல்லி அதன் காரணமாக அவன்மீது காதல் கொண்டு மன்னவன் நினைப்ப மனதை வாட்ட உணவு உறக்கம் இல்லாது அதே நினைப்புடன் வருந்திய நிலையில்; நள்ளிரவாகியும் உறக்கம் இல்லாமல் விழித்துக் கொண்டிருந்தாள். மன்னவன் அவளை அணுகியதும் தான் இதுவரையும் யாரை நினைத்து மனவாட்டத்துடன் காணப்பட்டாளோ அவனே தன் கண்முன் நிற்பதை அறிந்து கலக்கமுற்று கனவா? அல்லது நினைவா? என திகைத்தான். இளவரசியாரின் கூடாரத்திற்குள் வைத்து ஏதாவது பேசினால் காவலர்கள் உசாராகலாம் என்ற காரணத்தினால் அவளை அப்படியே பஞ்சணையோடு தூக்கிகொண்டு தன் கூடாரத்தை நோக்கி விரைந்தான் மன்னவன்.


மறுநாள் பொழுது விடிந்ததும் மருதப்புரவல்லி கண்களை திறந்தாள் அவள் இருப்பது மன்னவன் உக்கிரசிங்கனின் கூடாரம். அருகே உக்கிரசிங்கன் உறங்கவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் தான் நள்ளிரவில் உணர்ச்சிவசப்பட்டு மன்னவனுடன் வந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. உடனே அவள் மன்னவனை நோக்கி தன்நிலையினை வினவ மன்னவன் “நான் கதிரமலையை தலைநகராக கொண்டு இலங்கையின் ஒரு பகுதியினை ஆட்சி  செய்கின்ற உக்கிரசிங்கன் எனவும் நகுலேஸ்வரர் சந்நிதியிலே உன்னைக் கண்டதும் உன்மீது காதல் வயப்பட்டு உன்னை அடைவதை இலக்காக கொண்டு சில தினங்களாக உறக்கமில்லாமல் வருத்தமுற்று உன் நினைவில் ஏங்கியிருந்தேன்” என கூறினான். அத்தோடு “நீ இல்லாமல் என் தனிமை என்னை கொல்கின்றது. இப்பொழுதே நீ என்னுடன் வா நாம் கதிரமலைக்கு சென்று நம் திருமணத்தினை நடாத்துவோம்” என்று கூறினான். 


ஆனால் மருதப்புரவல்லி “நான் குன்ம நோய் நீங்கியதன் காரணமாக முருகப்பொருமானிற்கு மாவிட்டபுரத்திலே ஆலயம் எடுப்பதாக தீர்மானித்துள்ளேன் அதனால் எனது இந்த ஆலயம் எடுக்கும் பணிகள் யாவும் நிறைவ பெற்ற பின்னர்தான் தான் இவ்விடத்தை விட்டு வருவேன்” என மன்னவனிடம் கூறினாள். “அவ்வாறாயின் உனக்கு துணையாக இருந்து நானும் ஆலயம் அமைக்கும் பணியினை பூரணமாக நிறைவேற்றுவதற்கு அருகில் இருந்து பல உதவிகளை செய்கின்றேன்”என்று மன்னன் உக்கிரசிங்கன் இளவரசியிடம் கூறினான். 


இவ்வேளையில் மருதப்புரவல்லியின் கூடாரத்திலிருந்தவர்கள் இளவரசியை காணவில்லை  என பரிதவித்த நிலையில் தேடியலைந்தனர். பின்னர் உக்கிரசிங்க மகாராசாவின் கூடாரத்திற்குள் நுழைந்தபோது அங்கு சோழ இளவரசி இருப்பதனைக் கண்டு திகைத்துப் போயினர். இவ்வாறு திகைத்துப்போன இளவரசியின் தோழிமார் மன்னவனை நோக்கி “இளவரசியாரைக் காணவில்லை என்ற காரணத்தினால் அச்சமடைந்து பல இடங்களிலும் தேடியலைந்து இங்கு வந்திருக்கின்றோம். இந்நிலையில் நாங்கள் எமது சோழ அரசுக்கு என்ன பதில் கூறுவது என்று தடுமாறி நிற்கின்றோம்” என கூறினர். இதனைக் கேட்ட மன்னவன் பயந்து நடுங்கிப்போய் நின்ற தோழிப் பெண்களை நோக்கி “உங்கள் இளவரசியார் கதிரமலை அரசனான என்னை மணந்து கொள்ளப் போகின்றாள். நாங்கள் இருவரும் இதல் பூரணசம்மதத்துடன் இருக்கின்றோம் என்ற செய்தியினை உங்களுடைய அரசருக்கு உடனடியாக அனுப்புங்கள்” என்று கூறினான். இதனைக்கேட்ட தோழிப் பெண்கள் மருதப்புரவல்லியினை நோக்க அவளும் சைகையினால் தன் சம்மதத்தினை தெரிவித்தாள். 


இதன் பின் மாவிட்டபுரத்திலே முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதன் பொருட்டு தான் குன்மநோய் நீங்கியதன் காரணமாக மாவிட்டபுரத்திலே முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்போகின்ற செய்தியினையும் மருதப்புரவல்லி தன்னுடைய தந்தைக்கு அனுப்பி வைத்தாள். தன் மகளின் விருப்பத்திற்கிணங்க சோழதேசாதிபதியான திசையுக்கிர சோழன் தன் நாட்டிலே இருக்கின்ற சிறந்த சிற்பிகளையும் பெரும் தொகையான பொளையும் அனுப்பி வைத்தான். இச்சம்பவங்களின் விளைவாக மாவிட்டபுரத்திலே முருகப்பெருமானுக்கு அழகிய அம்சங்களைக் கொண்ட ஆலயம் எழுந்தது. மருதப்புரவல்லியினால் மாவிட்டபுரத்திலே எழுந்த ஆலயத்திலே எழுந்தருளச் செய்வதற்காக திருவுருவத்தினை அனுப்பிவைக்குமாறு இளவரசி தன் தந்தைக்கு தகவல் அனுப்பினாள். இதன்படி காசாத்துறையிலே காங்கேயன் திருவுருவம் வந்திறங்கியது. காங்கேயன் திருவுருவம் வந்திறங்கியதால் காசாத்துறை என்கின்ற இடம் காங்கேயன் துறை என்ற பெயர் பெற்றது. 


இவ்வாறு கொண்டுவரப்பட்ட காங்கேயன் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆனி உத்தர தினத்தன்று துவசாரோகணம் தொடங்கி பெருவிழாவினை நிறைவேற்றினாள் மருதப்புரவல்லி. இதன் பின்னர் மாவிட்டபுரத்திலே ஆலயம் அமைப்பதாக கொண்ட நோக்கு தங்கு தடையின்றி செவ்வனே நிறைவேறியமையினால் உக்கிரசிங்கன் பெரு மகிழ்ச்சியுடன் கதிரமலை சென்று சோழ இளவரசியான மருதப்புரவல்லியினை மணம் முடித்தான். இந்நிலையில் தன் துணைவியான மருதப்புரவ்லிலியினால் அமைக்கப்பட்ட ஆலயம் மாவிட்டபுரத்திலே இருந்தமையினாலும்; சிவவழிபாட்டிற்குரியதாக கதிரமலை இருக்காமையினாலும்; உக்கிரசிங்கன் தான் நீண்ட காலமாக தலைநகராக கொண்டு அரசாண்டு வந்த கதிரமலையை விடுத்துஇ இயற்கை அழகு மிக்கதும்; கலிங்கர் வாழ்ந்து கொண்டிருந்ததுமான சிங்கை நகரினை தன் இராசதானியாக கொண்டு மருதப்புரவல்லியுடன் ஆட்சியினை நடாத்தி வந்தான். 


இவ்வாறு உக்கிரசிங்கன் சிங்கை நகரினை தலைநகராக கொண்டு ஆட்சியை நடாத்தி சகல செல்வ சௌபாக்கியங்களையும் அனுபவித்துவரும் காலத்தில் உக்கிரசிங்கனுக்கும் மருதப்பிரவல்லிக்கும் அவர்களுடைய இல்லறவாழ்வின் இன்பமான தன்மைக்கு எடுத்துக்காட்டாக வாலசிங்கன் என்னும் ஆண்குழந்தையும் சண்பகவதி எனும் பெண்குழந்தையும் கிடைத்தது. பாலசிங்கனுக்கு நரசிங்கராசன் என்கின்றதொரு பெயரும் வழங்கப்பட்டது. 


உக்கிரசிங்கன் தனக்குப் பின்னர் ஆட்சிபீடமேற வேண்டியவானாக வாலசிங்கன் இருக்கின்றமையால் அவனுக்கு பலவிதமான கற்கை நெறிகள் அவசியம் என எண்ணினான். கால ஓட்டத்திற்கேற்ப வாலசிங்கனின் வளர்ச்சியும் உயர்ந்து கொண்டிருந்தது. சிங்கை நகரினைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்யப்போகின்ற அடுத்த மன்னனின் உருவாக்கம் தொடங்கியது. வாலசிங்கன் கலைகள் உட்பட்ட அனைத்து விடயங்களையும் கற்று தேர்ச்சி பெற்றதோடு தேர்ச்சி பெற்ற ஆசான்களிடம் போர் வித்தைகளையும் திறமையான முறையில் கற்று தேர்ந்தான்.


உக்கிரசிங்கன் தனக்குப்பின் தன் தேசத்தினை ஆள வேண்டிய மன்னவன் எவ்வாறான திறமைகளை எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என எண்ணினானோ அவ்வாறான அனைத்து விடயங்களும் உரிய திறைமையான ஆசான்களைக் கொண்டு கற்பித்தான். தன் தேசத்திற்குரி மன்னவன் தயார்படுத்தப்படுவதையிட்டு உக்கிரசிங்கன் பெரு மகிழ்ச்சியினை அடைந்தான். தந்தையார் விருப்பத்தினையும் நிறைவு செய்யும் பொருட்டு வாலசிங்கன் சிறந்த முறையிலே தன் கற்கைகளை மேற்கொண்டு வந்தான். உக்கிரசிங்கனின் பரம்பரையிலே தோன்றிய மன்னர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்புகளை தன்னிடத்தே வாலசிங்கன் வளர்த்துக் கொண்டான். தன் நாட்டையும் மக்களையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதனை தந்தையிடம் பாடம் கற்றுக் கொண்டான் வாலசிங்கன். 


வனத்திலே ஆச்சிரமங்களில் வாழ்ந்த முனிவர்களிடம் சென்று அவர்களுக்கு ஏவல் செய்து அவர்களிடம் பல நற்பண்புகளையும் சிறந்த ஞானத்தையும் பெற்றுக்கொண்டான். வாலசிங்கனின் பணிவு அடக்கம் என்பனவற்றின் பயனாக முனிவர்கள் அவனிடம் அதிக அன்பு கொண்டவர்களாக காணப்பட்டனர். முனிவர்கள் அவன் மீது கொண்ட அன்பின் விளைவாக அவனுக்கு பல அபூர்வ சக்திகளை கொண்ட பயிற்சிகளையும் வழங்கினார்கள். அதன் மூலமாக வாலசிங்கன் பல சிறப்பான இயல்பகளை தன்னகத்தே கொண்டவனாக காணப்பட்டான். முனிவர்களிடம் ஞான உபதேசம் பெற்றவனாகையால் வாலசிங்கன் சிறந்த ஒழுக்க சீலனாக காணப்பட்டான். வாலசிங்கனின் பலதரப்பட்ட வளர்ச்சியினைக் கண்ட உக்கிரசிங்கன் சிறந்த ஒரு மன்னனிடம் மக்களையும் நாட்டையும் ஒப்படைக்கப் போகின்றேன் என்ற திருப்தியினால் மனம் மகிழ்ந்தான். 


வாலசிங்கனின் வளர்ச்சியினால் நாட்டு மக்களும் மிகவும் மகிழ்ந்தனர். சிறப்பான ஒரு மன்னனின் ஆட்சியானது நிறைவடையப்போகின்ற தருணத்தில் இன்னுமொரு சிறந்த பண்புகளையுடைய மன்னனின் உதயம் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 


பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி இதிலிருந்து எவரும் மீள முடியாது என்பது உண்மை. வாலசிங்கன் தூணைப்போன்ற வலிமையுடையவனாக வளர்ச்சியடைந்து ஒரு மன்னவனுக்குரிய சகல இலக்கணங்களையும் பெற்றவனாக விளங்கினான். இவ்வேளையில் உக்கிரசிங்கன் முதுமையி;ன் கோரப்பிடியில் சிக்குண்டவனாய் அதிலிருந்து தப்ப முடியாத நிலையில் சிறந்ததொரு மன்னனாக தன் புத்திரனை உருவாக்கியதோடு அவனால் தன் தேசத்திற்கு சிறந்த ஒரு செங்கோல் ஆட்சி வழங்கப்படும் என்ற உறுதியோடும் உயிர் நீத்தான்.


உக்கிரசிங்கனின் மறைவு தேசத்து மக்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியது. உக்கிரசிங்கனின் மரணத்தினால் சிங்கை நகரம் இருள் சூழ்ந்தது போல் காட்சியளித்தது. எனினும் சூழ்ந்த இருள் நீங்கி மீண்டும் புதிய ஒரு காலைப் பொழுது விடிந்தது போல் வாலசிங்கனின் ஆட்சி தொடங்கியது. இருள் சூழ்ந்த வானத்திலே அதிகாலை நேரத்தில் பேரொளியுடன் உதிக்கின்ற சூரியனைப் போல் வாலசிங்கன் மக்கள் மத்தியில் தோன்றினான். தந்தைக்குப்பின் தனயன் என்பதற்கிணங்க வாலசிங்கன் ஜெயதுங்கபரராசசிங்கன் என்ற பட்;டத்துடன் சிங்கை நகர் அரியணையில் அமர்ந்தான். 


பல்வேறு சிறப்புக்கள் வாய்க்கப்பெற்றவனான வாலசிங்கன் உக்கிரசிங்கனின் இறப்பின் பின்னர் அவனைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு செங்கோல் ஆட்சியினை ஆரம்பித்தான். இவ்வாறு தொடர்ந்த வாலசிங்கனின் ஆட்சியிலே மக்கள் செல்வச் செழிப்புடனும் அச்சமின்றியும் அமைதியான சூழ்நிலையிலையிலே வாழக்கூடியதாக இருந்தது. வாலசிங்கன் இறைபக்தியில் சிறந்தவனாக விளங்கியதனால் சமய வழிபாடுகள் சிறப்புற்று காணப்பட்டன. தந்தை உக்கிரசிங்கன் விட்டுச் சென்ற பணிகளையும் தொடர்சியாக செய்தான் வாலசிங்கன். இவன் சிறந்த கலைஞனாக விளங்கியமையினால் கலைக்கூடங்கள் பல நிறுவப்பட்டன. இதன் மூலம் நாட்டில் கலை வளர்ச்சி ஏற்பட்டது. கஞைர்களும் புலவர்களும் பாராட்டப்பட்டனர். பட்டம் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மக்கள் சமுதாயத்தில் அனைத்துப் பகுதியினரையும் திருப்திப்படுத்தக்கூடியதான ஒரு ஆட்சியினை வாலசிங்கன் ஏற்படுத்தினான். கொடை வள்ளலான இவனுடைய ஆட்சியில் மக்கள் நிம்மதியான வாழ்க்கையினை வாழ்தனர்.